முர்மு தவிர்த்தால் மோடி ஏற்பாரா?  ஆளுநரை அகற்றும் போராட்டத்துக்கு அழகிரி அழைப்பு!

அரசியல்

 தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 9) ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுபவையாக இருக்கிறது என்றும் ஆளுநரை அப்பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “தமிழகத்தின் ஆளுநராக திரு. ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டது முதல், அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பியும் அதை அலட்சியப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடுகிற சட்டப் பேரவையில் ஆளுநர் உரை வாசிப்பது நடைமுறையில் உள்ளது.

ஆளுநர் உரை என்பது தமிழக அரசு தயாரித்து அளிக்கிற கொள்கை அறிவிப்பாகும். அந்த உரையை முழுமையாக வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமையும், பொறுப்புமாகும்.

அதை மீறுகிற வகையில் ஆளுநர் தனது உரையில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டு,

இடம் பெறாத சில வார்த்தைகளை கூறியது அப்பட்டமான அரசியல் சட்ட விதிமீறலோடு, சம்பிரதாயங்களையும் புறக்கணிப்பதாகும்.

இத்தகைய விதிமீறல்கள் தமிழக அரசிற்கு விடப்பட்ட சவால் என்பதை விட, அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தலாகும்.

தமிழக ஆளுநர் இத்தகைய அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அழகிரி மேலும்,

“ஆளுநர் உரையில், வளர்ச்சி குறித்து தமிழக அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்ற வாக்கியத்தையும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலை நாட்டுவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்கிற வாக்கியத்தையும் ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தது அவரது அராஜக, ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்துகிற ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர்.

Alagiri calls for a protest to remove the governor RN Ravi

தமிழக அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பான ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகங்களை தமிழக ஆளுநர் தவிர்த்ததைப் போல,

மத்திய அரசு தயாரித்த கொள்கை அறிவிப்பு வாசகங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிலிருந்து சில வாசகங்களை தவிர்த்து வாசித்தால் பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வாரா ? பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா ?,

எனவே, அரசமைப்பு சட்ட வரம்புகளை மீறிய ஆர்.என். ரவி, தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிற வகையில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்துவது மிகமிக அவசியமாகி விட்டதையே ஆளுநரின் இத்தகைய அத்துமீறல் போக்கு வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வேந்தன்

மேஜையை உடைத்து ரகளை: ரத்து செய்யப்பட்ட வழக்கறிஞர் தேர்தல்!

அரசுக்கும், ஆளுநருக்கும் அன்புமணியின் வேண்டுகோள்!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *