மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை டிசம்பர் 7 ஆம் தேதி விடுவித்துள்ளது.
எதிர்க்கட்சியினரை குறிப்பாக ஈடி, ஐடி, சிபிஐ வளையத்தில் இருக்கும் நபர்களை பாஜக மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது ஊழல்வாதிகளாக இருப்பவர்கள், பாஜகவுக்கு சென்றதும் வாஷிங்மெஷின் மூலமாக புனிதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது தான் அவர்கள் வைக்கும் வாதம்.
இந்தசூழலில் தான் டிசம்பர் 5 மகாராஷ்டிராவில் துணை முதல்வராக பொறுப்பேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் டிசம்பர் 7 ஆம் தேதி, வாஷிங் மிஷின் மூலமாக க்ளீன் செய்யப்பட்டுள்ளார்.
தனது மாமா சரத் பவாருடன் ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாக, 2023 ஜூலையில் தனது 8 ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தாவினார் அஜித்பவார். உடனே அவருக்கு துணை முதல்வர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
இந்தசூழலில் தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் பிரிவு 41 இடங்களை கைப்பற்றியது. இந்த வெற்றி சரத்பவாருக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது. சரத்பவார் வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் தோல்வியை சந்தித்தார்.
இந்தநிலையில், தான் பதவியேற்ற இரண்டே நாட்களில் அஜித்பவாருக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது.
அஜித் பவார் மீது என்ன வழக்கு?
கடந்த 2010-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி குழுவில், அப்போது அமைச்சராக இருந்த அஜித் பவார் அங்கம் வகித்தார். அப்போது ஜரந்தேஷ்வர் சஹாகாரி என்ற சர்க்கரை ஆலையை மும்பையைச் சேர்ந்த குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தது.
இந்த குரு கம்மாடிட்டி நிறுவனத்திற்கு அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுனேத்ராவுக்கு நெருக்கமான, ஸ்பார்க்லிங் சோயில் பிரைவேட் லிமிடெட் மூலம் நிதி அளிக்கப்பட்டு வந்துள்ளது.
அதாவது… இந்த குரு கமாடிட்டி நிறுவனம், அஜித் பவாரின் பினாமி நிறுவனம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்தநிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் அஜித் பவார் மற்றும் அவருக்கு தொடர்புடைய மும்பை, புனே, பாராமதி, கோவா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ரூ.183 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பினாமி பரிவர்த்தனைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அஜித் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்த ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. இதில் ஒரு டெல்லி பிளாட், ஒரு கோவா ரிசார்ட், மகாராஷ்டிராவில் 27 ஃபிளாட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அஜித் பவார் வழக்கு தொடர்ந்தார்.
பவார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், இந்த வழக்கில் சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை. பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமானவை. முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று வாதிட்டார்.
இந்தநிலையில், அஜித் பவார் பினாமி சொத்துக்களை கையகப்படுத்த நிதியை மாற்றினார் என்பதற்கும், சொத்துக்கள் சட்டத்திற்கு புறம்பாக வாங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, பவார் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்.
பாஜக வாஷிங் மெஷின்!
ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 25 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்ததால் அவர்கள் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாகவும், அந்த வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டது.
இந்நிலையில் அஜித் பவாரின் ஆயிரம் கோடி சொத்துகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது அறிக்கையில்,
“பா.ஜ.க.வின் வாஷிங் மிஷின் மீண்டும் ஆன் செய்யப்பட்டுவிட்டது. மோடியுடன் சென்று கறையை நீக்கிக் கொள்ளலாம் என்று கூப்பிடுகிறார்கள்.
இப்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், அஜித் பவாரை சுத்தம் செய்து பாலீஷ் செய்துள்ளது பாஜகவின் வாஷிங் மெஷின். அஜித் பவார் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
அஜித் பவார் மீது ஐ.டி. உள்ளிட்ட ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்த நேரத்தில், அவர் பாஜகவின் எதிர்க்கட்சியாக இருந்தார். அப்போது அஜித் பவாரின் கட்சியான NCP கட்சியை, Naturally Corrupt Party அதாவது இயற்கையாகவே ஊழல் கட்சி என்று மோடி கூறினார். ஒரு நாள் அஜித் பவார் சிறையில் தள்ளப்படுவார் என்று அப்போது பட்னவிஸ் எச்சரித்தார். இதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான்.
அவர் இப்போது பாஜகவின் கூட்டணிக் கட்சி ஆகிவிட்டதால் உத்தமராகிவிட்டார். பல வருடங்கள் பழமையான வழக்காக இருந்தாலும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுத்தமாய் வெளியே வரும் அளவுக்கு வாஷிங் மிஷின் ஆகிவிட்டது பாஜக” என்று விமர்சித்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
அவர்களில் வாஷிங் மெஷினால் சலவை செய்யப்பட்ட சில முக்கிய அரசியல்வாதிகளை பார்க்கலாம்.
சுவேந்து அதிகாரி
நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் எம்.பி சுவேந்து அதிகாரி மீது வழக்குத் தொடர மக்களவை சபாநாயகரின் அனுமதிக்காக 2019 ஆம் ஆண்டு முதல் சிபிஐ காத்திருந்தது.
இதையடுத்து 2020ஆம் ஆண்டு அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது.
ஹிமந்தா பிஸ்வா சர்மா
காங்கிரஸ் இருந்து தாவி பாஜகவில் இணைந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் மீதான வழக்குகளும் இந்த நிலையில் தான் உள்ளன.
2014-ம் ஆண்டு சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில், அசாம் முதல்வர் பிஸ்வா சிபிஐ விசாரணை மற்றும் சோதனைகளை எதிர்கொண்டார். ஆனால் 2015ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த பிறகு பிஸ்வா மீதான வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அசோக் சவான்
ஆதர்ஷ் வீட்டுவசதி வழக்கில் அசோக் சவான் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்தநிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இந்த சூழலில், பதவியேற்ற இரண்டே நாட்களில் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஐடி விடுவித்துள்ளது தேசிய அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. பாஜகவின் வாஷிங் மெஷின் ஃபார்முலாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.