மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று (ஜூலை 16) தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து அரசியல் திருப்புமுனைகள் அரங்கேறி வருகிறது. சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தனர். இந்தசூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 8 என்சிபி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனால் என்சிபி கட்சியில் பிளவு ஏற்பட்டது. அஜித் பவார், சரத் பவார் இருவரும் தனித்தனியாக கட்சி கூட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்தசூழலில் அஜித் பவார் இன்று மகாராஷ்டிராவில் உள்ள சரத் பவார் இல்லத்திற்கு சென்றார். அவருடன் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள ஹசன் முஷ்ரிப், சகான் புஜால், அதிதி தாக்கரே, திலிப் வால்ஸ் பாட்டீல் மற்றும் என்சிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் பட்டேல், “சரத் பவாரிடம் ஆசி வாங்குவதற்காக நாங்கள் வந்தோம். என்சிபி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்