மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரிடம் இருந்து 2021-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை விடுவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி ஆட்சிக் காலத்தில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அப்போதைய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித் பவார் பினாமியின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அஜித் பவாருக்கு சொந்தமான சதாராவில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் இருந்த ஃபிளாட், கோவா ரிஸார்ட் உட்பட ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதை எதிர்த்து அஜித் பவார் வருமான வரித்துறை டரிப்யூனலில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டிரிப்யூனல் “பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அஜித் பவாரின் பினாமி சொத்துக்கள் என நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறி அஜித் பவாரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில்தான் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை தற்போது விடுவித்துள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்ற அஜித் பவாரின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டில் “அஜித் பவார் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாகத்தான் செய்தார். அவரது குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை” என்றார்.
நடந்த முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பின் தற்போது மீண்டும் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அஜித் பவார். இந்தச் சூழ்நிலையில், இந்த தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்
“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு