ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திடம் அவகாசம் கேட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு!

அரசியல்

ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150 க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உதவும் வகையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

இதன்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவை எய்ம்ஸ் நியமித்திருந்தது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வருகின்ற ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்களது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக் குழு அனுப்பிய தகவலில், “ஆணைய விசாரணையில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பின்னரே அவர்கள் இந்தியா திரும்புவதால் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்துள்ளனர். இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகலாம்.

  • க.சீனிவாசன்
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *