ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைப் பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் குழு சென்னை வரவிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் காலை முதல் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். துணை ராணுவ கட்டுப்பாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியைச் சந்திக்கும் அமைச்சர்கள், ’அவர் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். பேச முடியாமல் இருக்கிறார். காது அருகே வீக்கம் இருக்கிறது. அமலாக்கத் துறையால் துன்புறுத்தப்பட்டிருக்கலாம்’ என்று கூறுகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு இசிஜி டெஸ்ட், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவை சரிபார்த்தல் என மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது இதயத் துடிப்பில் மாறுபாடு இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது செந்தில் பாலாஜி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி எய்ம்ஸ் நிபுணர்கள் குழு சென்னை வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அதேசமயம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சபட்ச சிகிச்சை உறுதிப்பட வேண்டும். எனவே எய்ம்ஸ் குழு சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது என் கருத்து என பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரியா