செந்தில் பாலாஜி உடல் நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, நேற்று (ஜூன் 14) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
பின்னர், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 15) இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ’ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புதிய மனுவை இன்று(ஜூன் 15) தாக்கல் செய்துள்ளது.
இச்சூழலில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவும், அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவும் இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆளுநர் தலையிட வேண்டும்: அதிமுக கோரிக்கை!
பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!