ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 20 ) தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செங்கலை காண்பித்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின் இன்றைய பிரச்சாரத்தின் போதும் கையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை எடுத்து காண்பித்தார்.
அப்போது பேசிய அவர் “இதுதான் பாஜகவும், அதிமுகவும் மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. செங்கல் மட்டும்தான் இருக்கிறது. பிரதமர் மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் இருந்தது ஒரு செங்கல்தான் “ என்றார்.
மேலும், கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன்.
கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

நான் சட்டமன்றத்தில் சொன்னேன், அதிமுகவினரிடம் கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என சொன்னார். ஆனால் இன்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நிற்கின்றனர்.
அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை” எனக் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெண் கலெக்டருக்கு பல அதிகாரிகளுடன் தொடர்பு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!
அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!