அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகா தேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி விசாரித்தது.
ஓபிஎஸ் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தமாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், “உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தினோம். உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்துவிட்டது.
எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்பது உறுதியாகிறது. ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் என் பக்கத்தில் அமர்வதால் மற்றவர்களிடம் ஆலோசனை நடத்த முடியவில்லை.
அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கட்சி சாராத உறுப்பினராக ஓ.பன்னீர் செல்வத்தைக் கருத வேண்டும். குறிப்பிட்ட நாளை ஒதுக்கி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களும் விசாரணைக்கு வரவுள்ளது.
மோனிஷா
தலைமறைவான கலாஷேத்ரா பேராசிரியர் கைது!
ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி தேசிய மாநாடு!