மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!

அரசியல்

டிசம்பர் 27ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து கிடக்கிறது. இருவரும் தங்களது அணிகளில் புதிய நிர்வாகிகளை நியமித்தனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளைக்கு (டிசம்பர் 21) கூட்டியுள்ளார். இக்கூட்டம், நாளை காலை, சென்னை வேப்பேரியிலுள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் அதிமுக வழக்கு மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்களை தீர்மானமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல், பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பன்னீர்செல்வத்தின் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இக்கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல், கட்சியின் கட்டமைப்பு, அதிமுக வழக்கு உள்ளிட்டவை விவாதிக்கப்பட இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!

சென்னை குப்பை லாரி நேர வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *