“உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு ஆளும் திமுகவுக்கு சம்மட்டி அடி” என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவல சாவி உரிமை தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில், அவரது மனுவை இன்று (செப்டம்பர் 12) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளரும், எம்.பியுமான சி.வி.சண்முகம், “ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது,
சென்னை அதிமுக அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள், ரவுடிகள் ஆகியோர் ஆயுதங்களுடன் தொண்டர்களையும் பொதுமக்களையும் தாக்கினர்.
மேலும் அதிமுக அலுவலகத்தையும் அடித்து உடைத்து பொருட்களையும் சூறையாடியதுடன், அலுவலகத்தையும் சீல் வைக்கும் நிலைக்கு உருவாக்கினர்.
திமுக அரசுடன் இணைந்து இத்தகைய செயலைச் செய்தனர்.
அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது.
அதன்படி அவ்வலுவலகத்தை எங்கள் பொறுப்பில் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தரவை எதிர்த்து கழகத்தைவிட்டு நீக்கப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஓர் அரசியல் கட்சி அலுவலகத்தை முடக்கினால், எப்படி அரசியல் கட்சி இயங்க முடியும்.
இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான செயல்’ என கருத்து தெரிவித்தனர். இதன்மூலம் பன்னீர்செல்வத்தின் அதிகார துஷ்பிரயேகத்தை உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது.
மேலும், இந்த தீர்ப்பு ஆளும் திமுகவிற்கு சம்மட்டி அடி. அதுமட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவும் செல்லும் எனக் கூறியிருக்கிறது.
மேலும், கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிற பன்னீர்செல்வத்தின் மனுவையும் நிராகரித்திருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்