அதிமுக வழக்கு: எடப்பாடி தரப்பு வாதத்தை ஏற்று ஒத்திவைப்பு!

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

அதிமுக தற்போது இரு அணிகளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக செல்லுமா, இல்லை ஓபிஎஸ் கைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

அதிமுகவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ‘ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

aidmk case supreme court enquiry in next month

இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார் மற்றும் குரு கிருஷ்ண குமார், “பொதுக்குழு கூட்டப்பட்டது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது.

எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகச் செயல்பட்டு பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார்” என்று வாதிட்டனர். அப்போது, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நீங்கள் தானே அதிமுகவின் பொறுப்பாளராக தற்போது இருக்கிறீர்கள். எனவே, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம்” என்று கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த நவம்பர் 11ஆம் தேதி நீதிபதிகள் , தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த நவம்பர் 19ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அதிமுக கட்சி விதிப்படி பன்னீர்செல்வம் கட்சியில் எந்த நிவாரணம் பெறத் தகுதியற்றவர். அவரது மனு அற்பமான ஒன்று. பொதுக்குழு அனைத்து விதிகளையும் கருத்தில் கொண்டுதான் கூட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி பொதுக்குழு வழக்கு நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கவும், ஆவணங்களை தாக்கல் செய்யவும் இரு வாரம் அவகாசம் வேண்டும்” என்று கேட்கப்பட்டது.

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று நவம்பர் 30ஆம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

aidmk case supreme court enquiry in next month

உச்ச நீதிமன்ற வழக்கு நிலவரப் பட்டியலில் நவம்பர் 30ஆம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 6ஆம் தேதிக்குத் தோராயமாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், “வழக்கு விசாரணையைத் தாமதிக்காத வகையில் டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

பன்னீர் தரப்பில் வழக்கறிஞர், குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி டிசம்பர் 13ஆம் தேதிக்கு வழக்கைப் பட்டியலிடுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் டிசம்பர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, கடந்த டிசம்பர் 6 அன்று விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில், “தங்கள் தரப்பு வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஜராக முடியவில்லை” என கூறி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை வழக்கைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுக்கிறது. இதனால் கட்சி செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வழக்கை ஒத்திவைக்கக் கேட்டு எங்களை தர்ம சங்கடப்படுத்தாதீர்கள்” என்று கூறி டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதுபோன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய எடப்பாடி தரப்புக்கு உத்தரவிட்டனர். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, அலுவல் நேரம் முடிந்ததால் வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரித்தனர்.

இவ்வாறு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று (டிசம்பர் 15) மீண்டும் பிற்பகல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ், மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”நேரமின்மை காரணமாக இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்கலாமா” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், “நாளைக்கு வேண்டாம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு தள்ளி வையுங்கள்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், ’இந்த விவகாரத்தில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு என்பது காலாவதியாகி விட்டது’ என்ற வாதமும் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டது.

இந்த வாதத்தைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், ”அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைக்கிறோம்” என தெரிவித்தனர்.

மேலும், இதுசம்பந்தமாக அனைத்து விதமான எழுத்துப்பூர்வமான வாதங்களையும் தாக்கல் செய்யும்படி, இருதரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அதிமுக வழக்கு மீண்டும் ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கிறது.

பிரியா, ஜெ.பிரகாஷ்

தீபிகா பிகினி உடை: விழிபிதுங்கும் தயாரிப்பு நிறுவனம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்: செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *