அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்க காரணமானவரும், அதிமுக-வின் முதல் எம்.பி-யுமான மாயத்தேவர் இன்று (ஆகஸ்டு 9) காலமானார். அவருக்கு வயது 88.
தமிழகத்தில் ஒரு கட்சி எப்படியோ அதைவிட முக்கியமாக பார்க்கப்படுவது அதன் சின்னம் தான். உதயசூரியனையும், இரட்டை இலையையும் தவிர வேறு சின்னமே தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் இன்றளவும் இருக்கிறார்கள். அந்த வகையில் இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணமாக இருந்த மாயத்தேவர் காலமானார்.
மாயத்தேவர் யார்?
உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 1935-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தவர் மாயத்தேவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல் நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றவர். சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த இவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.
அதிமுக முதல் வேட்பாளர்
திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுகவை 1972 இல் தொடங்கிய எம்.ஜி.ஆர். திண்டுக்கல்லில் 1973 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தனது முதல் வேட்பாளரை களமிறக்கினார், திண்டுக்கல் தொகுதி எம்.பி.யான திமுக-வைச் சேர்ந்த ராஜாங்கம் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இரட்டை இலை தேர்வு
அதிமுக வேட்பாளரான மாயத்தேவரிடம் 16 சின்னங்களைக் காட்டியது தேர்தல் ஆணையம். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினர். அப்போதுதான் அதிமுக-வுக்காக இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார் மாயத்தேவர். இந்த சின்னம் வெற்றியை குறிக்கும் என்றும் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் மாயத்தேவர் கூற அதை அப்படியே எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பின்னர் இரட்டை இலையே அதிமுகவின் சின்னமாக ஆகிப்போனது.
மாயத்தேவர் வெற்றி
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1973 மே இருபதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மாயத்தேவர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரத்துக்கும் சற்று அதிக வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் என்எஸ்வி சித்தனுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
‘பாராளுமன்றத்தின் சிங்கம்’
சில மனக்கசப்புகளால் அதிமுகவில் இருந்து விலகிய மாயத்தேவர் திமுக-வில் இணைந்தார், அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1973-77, 1977-80, 1980-84 என தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை பாராட்டி அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி, இவரை தன்னுடைய ‘மூத்த மகன்’ என்றே அழைத்தாராம்.
எம்ஜிஆர் இவரை ‘பாராளுமன்றத்தின் சிங்கம்’ என்றும் கலைஞர் இவரை ‘பாராளுமன்றத்தின் பீரங்கி’ என்றும் அழைத்திருக்கின்றனர். இன்று அதிமுகவின் சீனியர்களில் ஒருவராகவும் அதிமுக பொருளாளராகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவரின் உதவியாளராக இருந்தவர்.
88 வயதான மாயத்தேவர் உடல்நலக் குறைவு காரணமாக சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். இறந்து போன மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கே.எம்.வெங்கடேசன், கே.எம்.சுமதி, கே.எம். செந்தில்குமரன் என்ற மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் கே.எம்.வெங்கடேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
கலை.ரா
சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?