சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் “குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இன்னும் 7 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இன்று (ஜனவரி 31) அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
சிறுபான்மையின மக்களின் அரண்!
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டத்தின் பின்னணி!
பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்தது.
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்தது.
இந்த சட்டத்தில் தான் 2019 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்களை தவிர இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஒரு சீட் கூட கிடையாது” : காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கும் மம்தா
தொடர் நெகட்டிவ் விமர்சனம்: மோகன் லால் படத்திற்கு மஞ்சு வாரியர் ஆதரவு!