வைஃபை ஆன் செய்ததும் அதிமுக நிர்வாகிகள் திடீர் டெல்லி பயணம் பற்றிய ஊடகச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பிறகு மூன்று நாட்கள் மௌனம் காத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி பற்றி தேசிய தலைமை பதில் சொல்லும். எங்களுக்கும் அதிமுகவுக்கும் பிரச்சனை இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி பிற்பகல் திடீரென அதிமுக சார்பில் துணை பொது செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ். பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். அங்கே ராஜ்யசபா எம்.பி.யான சி.வி சண்முகம் இருந்தார்.
இவர்கள் அனைவரும் சென்று மத்திய அமைச்சரும் ஏற்கனவே தமிழ்நாடு விவகாரங்களை கையாண்டவருமான பியூஷ் கோயலை சந்தித்தனர். அதன் பிறகு அவர்கள் பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் சில நிமிடங்கள் நேற்று இரவு சந்தித்தனர். ஆனால் அதிமுக டீம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டதாகவும் அவர் சந்திக்க நேரம் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.
இதை அடிப்படையாக வைத்து இங்கே அண்ணாமலை ஆர்மியினர், ‘அண்ணாமலையை பற்றி புகார் கூற நீங்கள் அமித்ஷாவை சந்தித்து விடுவீர்களா?’’ என கேள்வி கேட்டு அதிமுகவினரை கேலி செய்தனர். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… ‘அதிமுக குழுவை சந்திக்க அமித்ஷா மறுத்துவிட்டார். எடப்பாடி சரண்டர் ஆகி விட்டார்’ என்றும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக குழுவினரின் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன அங்கு என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக விசாரித்த போது முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பிறகு தேசிய தலைமையில் இருந்து சிலர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
அந்த ஆலோசனையில், ‘2017 முதல் 21 வரை நான்காண்டுகள் நமது ஆட்சி நீடிக்க உதவியது மோடியும் அமித்ஷாவும் தான். இப்போது கூட அவர்கள் மேல் நமக்கு எந்த கசப்பும் இல்லை. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை தொடர்ந்து இந்த கூட்டணிக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் தூண்டுதலால் தான் நாம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவ்வளவு வருடங்கள் கூட்டணியில் இருந்த நாம் இந்த தகவலை டெல்லி தலைமை உணரும்படி அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்படி தான் வேலுமணி தனக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். ‘என்னை சந்திக்கலாம் ஆனால் அமித்ஷாவை உடனடியாக சந்திப்பது கடினம் தான்… ஆனாலும் முயற்சிக்கிறேன்’ என்று பியூஸ் கோயல் கொடுத்த உத்தரவாதத்தின் பெயரில் நேற்று பிற்பகல் அதிமுக குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
முதலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது பாஜகவின் தேசிய தலைமை சார்பில் சென்னைக்கு வந்து பங்கெடுத்தவர் பியூஸ் கோயல் தான். அந்த அடிப்படையில் அவரை சந்தித்த அதிமுக குழுவினர், ‘மீண்டும் மூன்றாவது முறை மோடி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நமது எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. அவர் தொடர்ந்து கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக கொச்சைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரை மாநில தலைவராக ஏற்றுக் கொண்டு கூட்டணியில் தொடர எங்களால் இயலாது. உங்கள் கட்சியின் மாநில தலைவரை மாற்றுவது என்பது உங்களது உட்கட்சி பிரச்சனை. ஆனால் அவர் மாநில தலைவராக இருந்தால் அது கூட்டணி பிரச்சனையாக மாறிவிடுகிறது. அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறதா அல்லது அங்கே ஆளுகிற திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றதா என்று உங்களது மத்திய உளவுத்துறை மூலமே நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
2017 இல் இருந்து நாம் கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். 2021 இல் அரசியலுக்கு வந்த அண்ணாமலையால் இந்த கூட்டணி பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் இதில் முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான்’ என்று கோயலிடம் அதிமுக குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவையும் சில நிமிடங்கள் சந்தித்து இந்த விஷயங்களை விளக்கி இருக்கிறார்கள்.
நேற்று மாலை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்தது. அக்கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி நேற்று மாலை அமித்ஷாவையும் நட்டாவையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமித்ஷா பிஸியாக இருந்ததால் அதிமுக குழுவினரை நேற்று அவர் சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இன்று காலை எப்படியாவது அமித்ஷாவை சந்தித்து விடலாம் என்று அதிமுக குழுவினர் காத்திருந்தனர். இன்று காலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்கள் இருந்ததாலும் பகல் 12 மணி அளவில் விமானம் மூலம் டெல்லியில் இருந்து அவர் மும்பை விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புறப்பட்டு சென்றதாலும் அதிமுக குழுவினரால் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை.
அண்ணாமலை கூட்டணியில் நீடித்தால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் நல்லுறவு இருக்காது என்றும் அப்படி தொண்டர்கள் அளவில் நல்லுறவு இல்லையென்றால் அந்தக் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என்றும் அதிமுக குழுவினர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொடர வேண்டும் புதிய கட்சிகள் இணைய வேண்டும் என்பதுதான் பாஜக தேசிய தலைமையின் கொள்கையாக இருக்கிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான அதிமுகவை இழப்பதற்கு பாஜகவின் தேசிய தலைமை விரும்பாது என்கிறார்கள் பாஜகவில் சிலர். அதே நேரம் அதிமுக என்ற இன்னொரு கட்சி சொல்வதால் தன்னுடைய மாநில தலைவரை மாற்றுவதற்கு பாஜகவின் தேசிய தலைமை சம்மதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் இதற்கான விடை கிடைக்கும் என்கிறார்கள் டெல்லி வட்டார பாஜகவினர்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
திமுகவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை!
என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா? சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி