"AIADMK tried to create riots" : Stalin's accusation!

”திட்டமிட்டு கலவரத்தை உருவாக்க அதிமுகவினர் முயற்சி” : ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அரசியல்

திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதற்காக சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) காலை கூடியதும் 3வது நாளாக கறுப்பு உடையில் வந்த அதிமுக உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை மதிக்க வேண்டும். கேள்வி நேரம் முடிந்த உடன் பேச அனுமதி அளிக்கப்படும். சட்டமன்றத்தை இடையூறு இல்லாமல் சுமுகமாக நடத்த வேண்டும்” என கூறினார். ஆனால் அதனை ஏற்காமல் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களை வெளியேற்றவும், இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதித்தும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அதிமுகவினரை அவை காவலர்கள் வெளியேற்றினார்கள்.

அதன்பின்னர் இந்த விவகாரம் குறித்து பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தேவையற்ற பிரச்சினையை அதிமுக சட்டப்பேரவையில் ஏற்படுத்துகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டசபையில் கடந்த 20ஆம் தேதி நான் விளக்கம் அளித்தேன். பிரதான எதிர்கட்சியான அதிமுக அன்றைய தினம் விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பங்கேற்காமல் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர்.

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டன. இதுவரை வழக்கில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவினரின் ஆர்ப்பாட்டத்தை தவறு என்று சொல்லவில்லை. போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் அதனை ஏற்கவில்லை.

அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது ஒரு குற்ற வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்த போது சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை போட்ட வீராதி  வீரர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதற்காக அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றியானது அவர்களின் மனதையும் கண்ணையும் உறுத்துகிறது. திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் எப்படி திசை திருப்புவது என்று எண்ணி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Share market: அதிக லாபம் கொடுக்கும் பங்குகள் என்னென்ன தெரியுமா?

‘கவச்’ இருந்தால் இரயில் விபத்துகள் நடக்காது : எப்படி?

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *