உச்சநீதிமன்ற தீர்ப்பால் இரட்டை இலை கிடைத்துவிட்டதால் அவர்களால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்கியது. இந்த வெற்றியை இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “வருங்காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த முடியும்.
இப்போ இரட்டை இலை கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கில் வெற்றி பெற முடியுமா அவர்களால்.
ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் ஆட்சி பலம், பணபலத்தோடு இருந்த போது அவர்களால் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே. இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான வெற்றி” என்றார்.
தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னால் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “உச்சநீதிமன்ற தீர்ப்பை நாம் விமர்சிக்கக் கூடாது. ஜூலை 11 பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதைத் தான் உச்சநீதிமன்றம் பார்த்திருக்கிறது.
அது தான் பன்னீர்செல்வத்தின் முறையீடாகவும் இருந்திருக்கிறது. இந்த நிலையில் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னணியில் யாரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
1 சதவீதம் கூட எடப்பாடியுடன் இணைவதற்கு வாய்ப்பில்லை. நாங்கள் தனிக் கட்சி தொடங்கியிருக்கிறோம். அவர்களிடம் இருப்பது உண்மையான அதிமுகவே கிடையாது. இன்றைக்குப் பண பலத்தால் அந்த கட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர். 3 முறை முதலமைச்சராக இருந்தவர். இன்னொரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இன்னும் அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் அதற்கான முறையீடு இருக்கிறது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
எனவே ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டது என்பதால் அவரை என்னுடன் வரச் சொல்லும் மனிதன் நான் இல்லை. அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
எடப்பாடிக்கு பாலாபிஷேகம்: வெற்றி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்
ஜெயலலிதாவின் ஆசிக்கு சாட்சி தான் இந்த தீர்ப்பு! – செங்கோட்டையன்