அதிமுகவில் இருந்து நீக்கம்… செந்தில் முருகன் எடுத்த திடீர் முடிவு!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகன் இன்று (ஜனவரி 21) திமுகவில் இணைந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. இந்தநிலையில், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் செந்தில் முருகன் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனுவானது ஏற்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

வேட்பாளர் இறுதிப் பட்டியல் நேற்று (ஜனவரி 20) வெளியான நிலையில், செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இந்தநிலையில், ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, திமுக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் செந்தில் முருகன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவர் இன்று முதல் திமுகவுக்காக வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசுவும், ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகனும் களமிறங்கினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதற்கிணங்க செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின்னர் இடைத்தேர்தல் முடிந்ததும் அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel