டெல்லியில் வட்டமடிக்கும் அதிமுக பிரமுகர்கள் – காரணம் இதுதான்!

Published On:

| By vanangamudi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தளவாய் சுந்தரம் போன்றவர்கள் டெல்லி சென்று வந்ததால், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களா என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது.

சென்னையில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வேலுமணி, திடீரென கூட்டத்தை ரத்து செய்து விட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியே டெல்லி சென்றார். பின்னர், பிப்ரவரி 5 ஆம் தேதிதான் சென்னைக்கு வந்தார். aiadmk seniors delhi visit

வேலுமணி டெல்லி விசிட் பற்றி கேட்டால் மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக சொல்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனும் டெல்லியில் இருந்ததால் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதாகவும், அமித்ஷாவை சந்தித்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டது.

அதிமுகவினர் டெல்லி விசிட் பற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்…

“தலைநகர் டெல்லியில் அதிமுக அலுவலகம் கட்டுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2010-ஆம் ஆண்டு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து மெஹ்ராலி பதர்பூர் சாலையில் ஆயிரத்து நூறு சதுர அடிக்கு இடம் வாங்கினார். அப்போதிலிருந்து அலுவலகத்தை கட்டி வந்தனர். 2020 – 2021 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே அலுவலகத்தை திறக்க முயற்சி செய்தார்.

திறப்பு விழாவிற்கு அமித்ஷாவை அழைத்தனர். அப்போது அவர் நேரம் கொடுக்காமல் இழுத்தடித்ததால், அதிமுக அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியை கிடப்பில் போட்டனர்.

தற்போது பிப்ரவரி 10-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தை திறக்க ஏற்பாடு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான வேலைகளை பார்க்கத்தான் முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று வருகின்றனர்.

பிப்ரவரி 10-ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக மூன்று மாடியில் கட்டப்பட்டுள்ள டெல்லி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்” என்கிறார்கள். aiadmk seniors delhi visit

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share