கள்ளச்சாராயத்தை ஒழிக்கக்கோரி நாளை (ஜூன் 25) அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 24) கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். அதற்கு யார் காரணம்?
முழுக்க முழுக்க திமுக அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு தான், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், போதைப்பொருள் நடமாட்டம், போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு போன்றவை நடைபெற்று வருகிறது.
பல முறை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கூட்டம் ஒன்றை கூட்டுகிறார். அதில் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதுபற்றிய செய்திகள் ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகைகளின் வாயிலாக வெளிவருகிறது.
இனி தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டம் அடியோடு ஒழிக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை அடியோடு ஒழிக்கப்படும் என்ற செய்தியை மட்டும் நாம் பார்கிறோம். ஆனால், தற்போது வரை அது ஒழியவில்லை.
தமிழகத்தில் இன்று போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை தடையின்றி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதை பற்றியெல்லாம் கவலைப்படாத முதல்வர் தான் ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சியின் மைய பகுதியில், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது என்றால், இந்த அரசு எந்தவகையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.
அதிகாரிகளை, ஆட்சியாளர்கள் ஆட்டிப்படைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சியில் திமுகவின் முக்கிய புள்ளிகளின் உதவியுடன் தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் என்னிடம் கூறினார்கள்.
ஒரு நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால், ஆளுங்கட்சியின் ஆதரவில்லாமல் அது நடைபெறாது. இந்த திமுக அரசின் ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை துச்சமென மதிக்கும் அரசாங்கம் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசாங்கம். நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஆட்சி செய்வதால் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 58 பேருக்கும் பொறுப்பேற்பது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கத்தின் அலட்சியத்தின் காரணமாகத்தான் 58 உயிரிழப்புகள் ஏற்பட்டது. 58 குடும்பங்கள் தற்போது நடுத்தெருவிற்கு வந்ததற்கு காரணமும் திமுக அரசு தான்.
முதல்வர் ஸ்டாலின் அடக்கு முறையை கையாள்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு திமுக அரசு இடையூறு விளைவிக்கிறது.
காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதேபோல் மக்களின் உணர்வுகளை நீங்கள் தடை செய்ய முடியாது, அவர்களின் கொந்தளிப்பை தடை செய்ய முடியாது. மக்களின் உணர்வுகளுக்கு திமுக அரசு பதிலளிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை எச்சரிக்கிறேன்.
இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக நடைபெறுகிறது, தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை தட்டி எழுப்பி, “இனி கும்பகர்ணன் போல தூங்காதே, விழிப்போடு இருந்து செயல்படு” என்பதை உணர்த்ததான்.
அப்பாவி, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களின் உயிர் பறிபோகிறதே அதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டுமென்றால் காவல்துறையினாலோ, ஆணையத்தாலோ கிடைக்காது.
பத்திரிகை, ஊடகங்களில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள், இதில் சம்மந்தப்பட்டு இருப்பது திமுகவின் பெரும்புள்ளிகள் என்று இவை அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும்.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என திமுக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம். மக்களுக்கு எப்போது துன்பம் வருகிறதோ, துயரம் வருகிறதோ அப்போது மக்களுக்காக செயல்படும் ஒரு கட்சி அதிமுக.
எதற்கும் அதிமுக அஞ்சாது. அடக்குமுறையை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. கள்ளக்குறிச்சியில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், ஒருவர் வயிற்றெரிச்சல், ஒருவர் வயது மூப்பு காரணமாகவும், ஒருவர் வலிப்பு வந்து உயிரிழந்ததாக கூறினார். மேலும், யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறினார்.
இதை ஏழை, எளிய மக்கள் நம்பி உள்ளனர். இதனால், துக்க வீட்டிற்கு சென்றும் பலர் சாராயம் குடித்துள்ளனர். இதனால், இன்னமும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
கள்ளச்சாராய விற்பனை செய்ததாக ஒருவர் இந்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டு கதவில் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் ஆதரவோடு தான் இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டது என்பது நிரூபனமாகிறது.
ஓராண்டு காலமாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அதேபோல், போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
சட்டமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டபோது அவைத்தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனால், தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவை மரபிற்கு எதிராக செயல்படுகிறார் என்று திமுகவினர் குற்றச்சாட்டுகின்றனர்.
மக்களுக்காகதான் சட்டமும், நீதியும். அந்த நீதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பேசிய நாங்கள் சட்டப்பேரவையை அவமதிப்பாக அவர்கள் கூறுகிறார்கள். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.
நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபோது இவை அனைத்தையும் நான் பார்த்தேன். ஏதோ சிகிச்சை அளிக்க வேண்டுமே என்பதற்காக ஆங்காங்கே மருத்துவர்கள் இருந்தனர். ஆனால், முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.
உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால், ஏழை மக்களின் விலைமதிப்பில்லாத இன்னும் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். தமிழக அரசிடம் கள்ளச்சாராய விஷ முறிவிற்கான மருந்து கையிருப்பில் இல்லை. அதற்கு ஆளுங்கட்சி கொடுக்கும் விளக்கம், அல்சர் மாத்திரையை காட்டி அது கையிருப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.
எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஸ்டாலின் போல் நான் இல்லை. நான் பொம்மை முதல்வராக இருந்தது இல்லை. எங்களுக்கும் தெரியும். எங்களிடத்திலும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
போதிய மருந்து கையிருப்பில் இல்லை என்று நாங்கள் கூறியதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்கும்போதும், அல்சர் மருந்தை தான் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே 29-03-2023 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், சட்டமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அவைத் தலைவரிடம் வழங்கினார். அதில் நானும் கையெழுத்திட்டேன். அந்த தீர்மானத்தில், கள்ளக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், சரியாக இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு செந்தில் குமார் எஸ்.பி.யை தொலைப்பேசியில் அழைத்து கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போதும் எந்தவித நடவடிக்கையும் எடக்கப்படவில்லை.
ஆளுங்கட்சியின் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது. அதனால், விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துள்ளோம். மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கூறுகிறார்கள். அது எப்படி அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்கும். ஆளுங்கட்சியின் புள்ளிகளுக்கு இதில் சம்மந்தம் இருப்பதால் தான் அனைத்தும் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.
போதைப்பொருள் விற்பனையை தடுக்கக்கோரி ஏற்கனவே ஆளுநரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தற்போது, கள்ளச்சாராய விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை (ஜூன் 25) அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனுக் கொடுக்க உள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் பாஜக மனு!
ரூ.4,000 கோடியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு!
Comments are closed.