அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன அந்த ஒரு கோடி பேர் யார்? மாஃபா கேள்வி!

அரசியல்

‘திமுக அரசின் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படாதவர்கள் யார்?” என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராக விருதுநகர் காரியபட்டியில் இன்று (ஜூலை 26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “திமுக அரசில் சொல்லப்பட்ட எந்த வளர்ச்சித் திட்டங்களும் கடந்த 15 மாதங்களில் நிறைவேற்றப்படவில்லை. அதில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டமான குண்டாறு நதி இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்து, மத்திய அரசின் ஆதரவால் செயல்பட வேண்டிய திட்டம் என்பதால்தான், அந்த திட்டத்துக்கு, இந்த விடியா அரசு எந்தவொரு நிதி ஒதுக்கீடும் செய்யாமல் முடக்கிவைத்திருக்கிறது.

மின்கட்டணம் உயர்வு இன்று அடித்தட்டு மக்களை அதிகம் பாதிக்கிறது. அதிலும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த மின் கட்டண உயர்வு ஒரு கோடிப் பேரை பாதிக்காது எனச் சொல்லியிருப்பது, இங்கிருக்கும் மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. அமைச்சர் சொன்ன, யார் அந்த ஒரு கோடிப் பேர் என அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். எல்லாருக்குமே 50 சதவிகித மின்கட்டண உயர்வு இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள். அதிலும் மின் நிறுவனத்தின் கடன் என்பது 1 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் ஷாக் அடிக்கக்கூடிய ஒரு செய்தியாக இருக்கிறது.

அதற்கு அமைச்சர், மத்திய அரசைக் காரணம் காட்டுகிறார். முதலில் அவர் அணிலைக் காரணம் காட்டினார். இன்று மத்திய அரசைக் காரணம் காட்டுகிறார். இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் குறிப்பாக மின்துறையில் ஒவ்வோர் இடத்திலேயும் ஊழல் நடைபெறுகிறது. அதனால்தான் கடன் அதிகமாகிறது. அதன்காரணமாகவே மக்கள் தலையில் மின்கட்டணத்தைச் சுமத்துகிறார்கள் என்பது அடித்தட்டு மக்களுக்கும் புரிந்திருக்கிறது. இதற்குப் பதிலடி தர, அடுத்த தேர்தலில் எல்லாரும் தயாராய் இருக்கிறார்கள்” என்றார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *