கிருஷ்ணகிரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிமுக எடுத்த முக்கிய முடிவு!

Published On:

| By Selvam

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்டதைக் கண்டித்து, அதிமுக சார்பில் பிப்ரவரி 8-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 6) தெரிவித்துள்ளார். aiadmk protest against krishnagiri

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவல நிலை தொடர் கதையாக இருந்து வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பல்வேறு குற்றச் செயல்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப் பள்ளி மாணவிக்கு, தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கின்ற செயல்.

திமுக அரசு இந்தக் கொடூரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ் நாட்டைத் தள்ளியதற்கு, திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும், தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை ஒடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில், பிப்ரவரி 8-ஆம் தேதி, சனிக் கிழமை காலை 10 மணியளவில், ‘கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில்’ கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். aiadmk protest against krishnagiri

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share