ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது தலைமறைவாகியுள்ள ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தசூழலில், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், போதைப்பொருள் தலைமையிடமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, போதைப்பொருள் விற்பனையால் தமிழக இளைஞர்கள் வாழ்க்கை சீரழிவதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதிமுக ஆட்சிகாலத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்தோம்.
திமுகவிற்கு சமுதாயத்தை பற்றி கவலையில்லை. குடிப்பழக்கம் இல்லாத மாநிலத்தில் முதன்முதலாக குடிப்பழகத்தை அறிமுகப்படுத்தியது திமுக தான்.
தமிழகத்தில் இன்று போதைப்பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. திமுகவை சார்ந்தவர்களே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதால், அரசு கண்டுகொள்வதில்லை.
பிரதமரின் மோடியின் தமிழக வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது திராவிட மண். இங்கு வடமாநில கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காது.
காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. ஆனால், அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. அதேபோல் தான் பாஜகவும், 3 – 4 சதவிகிதம் வாக்கு வாங்குவார்கள். அதனால் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது வீணாண முயற்சி தான் . அதனால் ஒரு பலனும் கிடைக்காது” என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, விழுப்புரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையிலும், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ED ரெய்டா? – நவீன் பில்டர்ஸ் மறுப்பு!
கலைஞர் அருங்காட்சியகம் : அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?