மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 9

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

சேகர் ரெட்டி இது ஏதோ தெலுங்கு மசாலா படத்தில் வரும் வில்லன் பெயர் அல்ல. தமிழகத்தின் பொதுப்பணித் துறையில் கோலோச்சிய காண்ட்ராக்டர். தமிழக அமைச்சர்களுக்கு நெருங்கியவர். குறிப்பாகப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீருக்கும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிசாமிக்கும் வருடக்கணக்கில் சேகர் ரெட்டியோடு டச் உண்டு என்பதை உணர்ந்தது டெல்லி.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே தனது தமிழகத் தாண்டவத்துக்கு ஏற்ற ஆட்டக்காரர் இவர்தான் என்பதை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, மத்திய உளவுத்துறை ஆகியவற்றின் மூலம் டிக் அடித்துவிட்டது டெல்லி.

டிசம்பர் 5 ஜெயலலிதா இறப்பு அறிவிக்கப்படுகிறது. டிசம்பர் 9 அறிவிக்கப்படாமல் சேகர் ரெட்டியைக் குறிவைத்து மத்திய வருமான வரித்துறை பாய்கிறது.

ஜெ மறைவுக்குப் பின்னர் ஆட்சி நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எல்லாமாக இருந்தது சேகர் ரெட்டிதான் என்பதை அனைத்துப் பத்திரிகைகளும் எழுதின.

135 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திவந்த அதிமுக என்ற கட்சி, இத்தனை எம்.எல்.ஏ.க்களில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே இழந்துவிட்டது. மீதம் 134 எம்.எல்.ஏ.க்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டு அரசியலில் தன் தாண்டவத்தை எப்படி நடத்த முடிகிறது?

‘இது எங்கள் கட்சி, இது எங்கள் ஆட்சி… நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என்று ஒரு அதிமுக எம்.எல்.ஏ.கூட ஏன் டெல்லியை எதிர்த்துக் கேட்க முடியவில்லை? ஏன் ஒரு அமைச்சர் கூட மத்திய பாஜக அரசின் எந்த நடவடிக்கையையும் எதிர்த்து வாய் திறக்க முடியவில்லை? ஏனென்றால், டெல்லிக்குப் புரிந்திருக்கிறது. அடித்தால்கூட இவர்களால் வாய்விட்டு அழக்கூட முடியாது. காரணம், வாயைத் திறந்தால் ஊழல் நாற்றம் வெளியே வீசும் என்பதால்தான் அதிமுகவினர் அடக்கி வாசிக்கவில்லை, அடங்கியே வாசிக்கின்றனர்.

சேகர் ரெட்டி வழக்கு என்னாயிற்று? மோடி தனது சாதனை என்று 56 இஞ்ச் மார்தட்டிக்கொள்கிற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு, ஒரே மாதத்தில் 9 கோடி ரூபாய்க்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் பணத்தை சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றியதாக வருமான வரித்துறை அறிவித்ததே… இது தன் பணம்தான் என்று சேகர் ரெட்டி ஒப்புக்கொண்டதாகவும் சொன்னதே?

இதோ அடுத்த டிசம்பர் வரப்போகிறது. சேகர் ரெட்டியை ரெய்டு செய்து ஒரு வருடம் ஆகப் போகிறது. அவர் கைதாகி, மே மாதம் ஜாமீனிலும் வெளிவந்துவிட்டார். ஆனால், அவ்வளவு களேபரம் நடத்தி மத்திய வருமான வரித்துறை நூற்றுக்கணக்கான ஊழியர்களை வைத்து நடத்திய அந்த ரெய்டு ஆபரேஷனுக்கான நடவடிக்கை என்ன?

நாம் கேட்கவில்லை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியே கேட்கிறார்.

சேகர் ரெட்டியும் அவரோடு சேர்த்து இந்த விவகாரத்தில் புகார்களுக்கு உள்ளானவர்களான ஆடிட்டர் பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தனர்.

“எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் எங்களுடையவைதான். அவை மணல் மூலமாக எங்களுக்கு வந்தவை. ஒரே குற்றத்துக்குப் பல வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. இதைக் கருத்தில் கொள்ளாமல் எங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே சி.பி.ஐ. பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான் சேகர் ரெட்டி அண்ட் கோ தாக்கல் செய்த வழக்கு.

ஆனால், இவ்வளவு சீரியசாகப் பொருளாதார சீர்திருத்தத்தை நாட்டில் அமல்படுத்தி மக்களை எல்லாம் வங்கிகளில் காக்க வைத்து… வங்கி வரிசையில் காத்திருந்தவர்களின் உயிர்கூடப் பறிபோகும் அளவுக்கு சீர்திருத்தத்தை செம்மையாக நடத்திய மத்திய அரசு, சேகர் ரெட்டி வழக்கை ஏன் பத்து மாதங்களாக ஆறப் போட்டது?

சேகர் ரெட்டி அண்ட் கோ தொடுத்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் சி.பி.ஐ.யிடம் கேள்வி கேட்கிறார்.

இதையடுத்து, அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

“பறிமுதல் செய்யப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லையா? நடத்தவில்லை என்றால் ஏன் நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? ஏன் அவர்களை சி.பி.ஐ. கைது செய்யவில்லை? கைப்பற்றப்பட்ட பணம் வங்கியின் நோட்டுகள்தானே? அதுபற்றி ஒன்றும் துப்பு கிடைக்கவில்லையா? சி.பி.ஐ. இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அக்டோபர் 25ஆம் தேதிக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

மோடி மீது ஃபேஸ்புக்கில் விமர்சித்ததால் தேடிவந்த போலீஸ்… மோடியின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையில் ஒரே மாதத்தில் ஓட்டையைப் போட்ட சேகர் ரெட்டியை ஏன் கைது, ஜாமீனோடு விட்டுவிட்டது? அந்த வழக்கு ஏன் அப்படியே இருக்கிறது?

ஏனென்றால்… அந்த வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால்தான்… அது தொடர்பான தமிழக புள்ளிகளைப் பதற்றத்திலேயே வைத்திருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கத்தி உன் தலையில் இறங்கலாம் என்ற பயத்தை அவர்களுக்கு உண்டாக்கலாம்.

ஒருவருடைய பலவீனத்தை அறிந்து வைத்துக்கொண்டு, அதை வெளியே சொல்லாமல், ‘சொல்லிவிடுவேன் சொல்லிவிடுவேன்’என்று மிரட்டுவதை நாம் பிளாக் மெயில் என்போம். அரசியலில் இதை சாணக்கியம் என்பார்கள். குறிப்பாக இந்த விளையாட்டைப் பொம்மலாட்டம் என்பார்கள்…

(அடுத்த ஆட்டம் திங்களன்று…)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 3

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 5

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 6

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 7

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 8

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 9

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *