ஆரா
டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதா காலமானார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கிறது. நவம்பர் 8 பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், ஏ.டி.எம்., வங்கி என்று அலைந்துகொண்டிருந்த தமிழகப் பொதுஜனம் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை ‘முந்தி’ சொன்ன சேனல்கள் உபயத்தால் மேலும் களேபரம் அடைந்து வீடுகளுக்கு ஓடினர்.
அன்று இரவே அவசர அவசரமாக ஆளுநர் மாளிகையில், மிகச் சிறந்த சவுண்ட் இன்ஜினீயர்கள்கூட தோற்றுவிடும் வகையில் கதறல் சத்தத்தோடும், அழுகைச் சிணுங்கல்களோடும் ஓ.பன்னீர் முதல்வராக பதவியேற்க, அதே அமைச்சரவை அப்படியே மறுமுறையும் பதவி ஏற்றுக் கொண்டது.
டிசம்பர் 6ஆம் தேதி மோடி வந்தார். ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார். அவர் கார் ஏறிப்போகும் வரை அவரை முட்டிமுட்டி அழுதார் ஓ.பன்னீர். ஆனால், நான்கு நாள்களில் அடுத்த பொம்மலாட்டம் ஆரம்பித்தது.
நரேந்திர மோடி டிசம்பர் 5ஆம் தேதி சென்னை வரும்போதே வருமான வரித்துறையின் துணை இயக்குநர் ராய் ஜோஸ் தலைமையில், 150 பேர் கொண்ட குழுவினர் தயாராகத்தான் இருந்தனர். அவர்கள் எல்லாவிதத்திலும் தயாராக இருந்தபோதும், கடைசி நேர கிரீன் சிக்னல் வரவில்லை. அது மோடி வந்து சென்ற சில தினங்களில் கிடைத்தது.
அதாவது டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலை தமிழ்நாட்டின் வெகுஜனம் சேகர் ரெட்டி என்ற பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தது. அதற்கு முன்புவரை அரசியல் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மட்டத்திலேயே புழக்கத்தில் இருந்த சேகர் ரெட்டி என்ற பெயர் அன்றுதான் டிஜிட்டல் டீக்கடைகளில் சூடாக பேசப்பட்டது.
ஆம், தொழிலதிபர் சேகர் ரெட்டியைக் குறிவைத்து தமிழகத்தில் பல இடங்களில் வருமான வரித்துறை பாய்ந்தது. சேகர் ரெட்டி தமிழகத்தின் முக்கிய மணல் காண்ட்ராக்டர்களில் ஒருவர். அப்போதைய பொதுப்பணித்துறை மற்றும் முதலமைச்சரான ஓ.பன்னீருக்கு நெருக்கமானவர் என்று எல்லாரும் பேசினார்கள். அன்று ஓ.பன்னீர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமே அண்மையில், ‘சேகர் ரெட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர்’என்று சொல்லியிருந்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி முதல் நாள் ரெய்டு முடிந்ததும், வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டது.
“தொழிலதிபர் சேகர் ரெட்டி, தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கான உரிமம் பெற்றுள்ளார். அவர் தொடர்புடைய 6 குடியிருப்புகள் மற்றும் 2 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.96 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், ரூ.9 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள புதிய ரூ.2,000 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை, அதுவும் புதிய நோட்டுகளாக கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை ஆகும். அத்துடன், 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.36 கோடியே 29 லட்சம் ஆகும். இவை எல்லாம் கணக்கில் வராத சொத்துகள் ஆகும். கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.142 கோடியே 81 லட்சம் ஆகும்” என்பதுதான் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கை. மேலும், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கட்டுக்கட்டான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் படத்தையும் வெளியிட்டது வருமான வரித்துறை.
மறுநாள் நடந்த சோதனையில், மாலை வரையிலான நிலவரப்படி ரூ.32 கோடி ரொக்கமும், 30 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் இரு நாள்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.138 கோடியே 52 லட்சம் ரொக்கமும், 157 கிலோ தங்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், கான்டிராக்ட் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அந்த ஆவணங்களை மீளாய்வு செய்து வருகிறோம். அதே சமயத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது என்று அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அன்றைய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
இது அனைத்தும் தன் பணம்தான் என்றும் சேகர் ரெட்டி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்துக்குப் பிறகு அதுவும் ஒரே மாதத்தில் நாட்டிலேயே மிக அதிகமாக எந்த வங்கி மூலமாகவும் பெறாமல் பத்து கோடி ரூபாய்க்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் வாங்கி வைத்திருக்கிறார் சேகர் ரெட்டி.
இது தன் பணம்தான் என்று வருமான வரித்துறையிடம் சேகர் ரெட்டி ஒப்புதல் கொடுத்தார். ஆனால், இது சேகர் ரெட்டியின் பணம் மட்டும்தானா என்று மோடிக்குத் தெரியும். சேகர் ரெட்டியின் அனைத்து ஆவணங்களும் மோடியின் கையில் இருக்க… ஆட்டோமேட்டிக்காக தமிழகத்தின் அதிகார வர்க்கம் மோடிக்குச் சலாம் போடத் தொடங்கியது
அது சரி… இதில் பொம்மலாட்டம் எங்கே நடக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்தப் பொம்மலாட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் நூலின் பெயர்தான் சேகர் ரெட்டி. உறுதியான நூல் என்பதால் பொம்மைகளை எவ்வளவு வேண்டுமானாலும் உலுக்கலாம் என்று முடிவு செய்தது டெல்லி!
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)