ஆரா
இந்தப் பொம்மலாட்டம் மினி தொடரின் நோக்கமே ஜெயலலிதா உடல்நலக் குறைவால், அதன்பின் அவரது மரணத்தால் தமிழகத்தின் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தேக்கத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு, ஜெயலலிதாவால் தமிழக மக்கள் நலனை முன்னிறுத்தி எதிர்க்கப்பட்ட திட்டங்களைத் திணித்ததை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். இதுமட்டுமல்ல… தனது அரசு மற்றும் அரசியல் அஜெண்டாக்களின் களமாகத் தமிழகத்தை மெல்ல மெல்ல டெல்லி பயன்படுத்திக் கொண்டிருப்பதை விளக்குவதுதான் இந்த ‘பொம்மலாட்டத்தின் கதை’யின் அஜெண்டா.
அந்தவகையில், உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சென்னை கோட்டையைத் தேடி வந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டபோது அதை நிராகரித்தார் ஜெயலலிதா.
**உதய் திட்டம் அப்படி என்னதான் சொல்கிறது?**
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டு நிலவரப்படி மின்வாரியத்தின் கடன் சுமை 81 ஆயிரத்து 782 கோடி ரூபாயாகும். மின்சார வாரியத்தின் வருவாயில் பெரும் பகுதி கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே போதுமானதாக இருப்பதால், வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க அடிக்கடி மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் உதய் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
உதய் என்பது பல இந்தி வார்த்தைகளின் கூட்டாக அமைந்த சொல்தான். ‘உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா’ என்ற இந்தி வார்த்தைகளின் தொகுப்புதான் உதய்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடனில் 75 விழுக்காட்டை இரு கட்டங்களில் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; மீதமுள்ள 25% கடனை சமாளிக்க கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்பதுதான். மின்சார வாரியம் அதன் கடன்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தி வரும் நிலையில், தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் கடனுக்கு 8% வட்டி செலுத்தினால் போதுமானது. இதனால் மின்சார வாரியத்திற்கு லாபம் கிடைக்கும் நிலையில், அதன் கடனைச் சுமக்க வேண்டியிருப்பதுடன், அதற்கான கூடுதல் வட்டியையும் அரசே செலுத்த வேண்டும்.
மின்சார வாரியத்துக்கு மொத்தம் 81 ஆயிரத்து 782 கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில் இரு கட்டங்களில் தலா 32 ஆயிரத்து 660 கோடி வீதம் 65 ஆயிரத்து 320 கோடி ரூபாய் கடனை தமிழக அரசு ஏற்கும். மீதமுள்ள 16 ஆயிரத்து 462 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். மேலும், மின்சார வாரியத்துக்கு இனி ஏற்படும் இழப்புகளையும், கடன் பத்திரங்களுக்கான வட்டியையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
இதுதான் உதய் திட்டம்.
இவ்வளவு சுற்றி வளைத்துச் சொல்வதற்குப் பதிலாக, 2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தின்போது அப்போதைய ஜெயலலிதா அரசின் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், உதய் திட்டம் பற்றியும் அதை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்பது பற்றியும் மேடைகளில் விளக்கினார். அதை தேர்தல் பிரசாரம் என்று எடுத்துக் கொண்டுவிட முடியாது. உதய் திட்டத்தை ஏன் தமிழகம் எதிர்க்கிறது என்பதற்கான துறை ரீதியில் அமைச்சர் கொடுத்த விளக்கம் அது. என்ன சொன்னார் நத்தம்?
“உதய் திட்டமானது மின்சார சீர்திருத்த நடவடிக்கையில் மக்களை ஏமாற்றும் திட்டமாகும். இதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை. இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததற்கு காரணம் உள்ளது. அந்நிய நாட்டு நிதி நிறுவனங்கள் கொடுத்த நிர்ப்பந்தமே உதய் திட்டமாக வந்துள்ளது.
உண்மையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டுமென்றால் நிலக்கரி விலையை குறைத்திட வேண்டும். நிலக்கரியினால் ஏற்படும் கரியமிலவாயு சரிசெய்யும் செஸ் தொகை ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.51.50 ஆக இருந்தது. அதை தற்போதைய பாஜக அரசு ரூ.400 ஆக உயர்த்தியுள்ளது. உதய் திட்டம் ஏற்கப்பட்டால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்றும் அத்தகைய மின்கட்டண உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்றும் மேலும், தனியார் வங்கிகளிடம் கடன் வாங்குவதற்கான ஏற்பாடாகும் இந்த உதய் திட்டம். அதனால்தான் அம்மா அவர்கள் உதய் திட்டத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கவில்லை” என்பது நத்தம் விசுவநாதன் 2016 தேர்தல் பிரசாரத்தில் பொது மேடைகளில் முழங்கிய உண்மை.
அந்தப் பன்னாட்டு சதித் திட்டத்தை, தனியார் வங்கிகளிடம் மின்சார வாரியங்கள் கடன் வாங்குவதற்கான அபாய அச்சாரத்தை ஜெயலலிதா எதிர்த்தார். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் தமிழகத்தின் ஆளுமைகள். இவர்களின் ஒவ்வோர் அரசியல் முடிவும், அதற்கான பின்னணிகளும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஜெயலலிதாவுக்குப் பின் வந்த அதிமுக அரசு தனிப்பட்ட ஆளுமையற்றதாக உள்ளது என்பதே கடந்த ஒன்பது மாதங்களாக நிலவி வரும் நிஜம்.
ஜெயலலிதா கடுமையாகவும், முழுமையாகவும் எதிர்த்த உதய் திட்டம் பற்றி விவாதிக்க அக்டோபர் 21ஆம் தேதி டெல்லி சென்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தார் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. முக்கியக் குறிப்பு… அப்போது ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி சரியாக ஒரு மாதம் ஆகியிருந்தது.
அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், ‘தமிழ்நாடு கொள்கை அளவில் உதய் திட்டத்தில் இணைந்துவிட்டது’என்று அறிவித்தார்.
யார் இதைச் சொன்னது? ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை என்று 2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்ன பியூஷ் கோயல், ஜூலை 2016இல் கோட்டைக்கு வந்து ஜெயலலிதாவைத் தேடி வந்து சந்தித்துச் சென்ற பியூஷ் கோயல்…. அக்டோபர் 2016இல் தன்னை தேடி வந்து சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசிவிட்டு, ‘தமிழகம் கொள்கை அளவில் உதய் திட்டத்தில் இணைகிறது’ என்று அறிவிக்கிறார்.
அப்படியென்றால் ஜெயலலிதாவின் கொள்கை வேறு… அப்போது முதல்வரின் இலாகாக்களைக் கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் கொள்கை வேறு என்றுதானே அர்த்தமாகிறது.
உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததின் பின்னால் என்ன நடந்தது?
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குதான் முதல் ஷாக் அடித்தது. ஆம். மின்சாரத்துக்கே ஷாக் அடிக்கும் திட்டம்தான் உதய்.
(அடுத்த ஆட்டம் திங்களன்று)