மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 5

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

பொம்மையின் காலில் கட்டியிருக்கும் நூலை இழுத்து அசைக்கின்ற, அதே மைக்ரோ நொடியில்… காதில் கட்டியிருக்கும் நூலையும் இழுக்க வேண்டும். ஒரு நூலை இழுத்து முடித்துவிட்டு அது ஏற்படுத்திய அசைவு அடங்கியபிறகுதான் அடுத்த நூலை இழுக்க வேண்டும் என்று நினைத்தால் பொம்மலாட்டம், பொம்மலாட்டமாக இருக்காது!

பார்வையாளர்களுக்கு யோசிக்க நேரம் கிடைத்தால் அவர்கள் சிந்தனையாளர்களாக மாறிவிடுவார்களே…அதனால் கொஞ்ச நேரம் கூட இடைவெளி விடாமல் அடுத்தடுத்த நூல்கள் இழுத்து அசைக்கப்படும்.

இந்த ஆட்ட விதிமுறையை அழகாக கச்சிதமாக பயன்படுத்திவருகிறது மத்திய அரசு. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல் படுத்துவதற்காக ஒரு நூலை இழுத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உதய் எனப்படும் மின்வாரியங்கள் தொடர்பான திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இன்னொரு நூல் டெல்லியில் இருந்து இழுக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தை அறிந்துகொள்வதற்கு முன்…2016 ஜூலை மாதம் 15 ஆம் தேதி மாலை நேரத்துக்கு ஊடகங்களின் துணையோடு நாம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் வரை சென்று வருவோம்.

வரலாற்றை எப்படி கி.பி, கி.மு என்று கிறிஸ்துவை வைத்து பிரிக்கிறார்களா… அதுபோல நமது பொம்மலாட்டத்தை ஜெ.மு, ஜெ.பி. என்று பிரித்தால் சரியாக இருக்கும். அதாவது ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின்! இன்னும் விரிவாக சொன்னால் ஜெயலலிதா அப்பல்லோ செல்வதற்கு முன், சென்ற பின் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு ஜூலை 15, 2016.

சென்னை வந்த அன்றைய மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார். அன்று மாலை 5.30-க்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது அவருக்கு. அதனால் மாலை 5.25 மணிக்கு கோட்டைக்கு வந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கோட்டைக்கு வந்த மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

பியூஷ் கோயல் வந்த விஷயமே உதய் திட்டம் பற்றி பேசுவதற்காகத்தான். அந்த சந்திப்பில் ஜெயலலிதாவிடம் இதுபற்றி அவர் கேட்க… அதற்கு பதிலாக ஜெயலலிதா சொன்னதை தமிழக அரசே அன்று செய்திக் குறிப்பாக வெளியிட்டது.

’’தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது சில கருத்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்வைத்தார்.

மாநில வழித் தடத்தில் கூடுதலாக 8,432.5 மெகாவாட் மின்சாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கூடுதலாக சேர்த்துள்ளது. இது தமிழகத்தை மின்சார நிறைவு பெற்ற மாநிலமாக மட்டுமல்ல, உபரி மின்சாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றியுள்ளது.

காற்றாலை மின் நிறுவு திறன் தமிழகத்துக்கு 7 ஆயிரத்து 600 மெகா வாட் ஆக உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதல் கேட்பு (ஆர்.பி.ஓ.) தேவையுள்ள மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்யும் நிலையில் தமிழகம் உள்ளது என்று மத்திய மந்திரியிடம் கூறினார்.எனவே உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக தனிப்பட்ட பசுமை மின்வழித் தடத்தை அமைத்துத் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்’’என்ற தமிழக அரசு அடுத்து உதய் விஷயத்துக்கு வந்தது.

’’உதய் திட்டத்தை பொறுத்தவரை, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) கடன் சுமையை மாநில அரசு அப்படியே ஏற்கும்போது, மாநிலத்தின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று ஏற்கனவே 23.10.15 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

14-6-16 அன்று பிரதமரிடம் கொடுத்த மனுவில் இந்தக் கருத்துகள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த கோரிக்கைகளை சாதகமாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசின் மின்சாரத் துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலாளர், நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், டான்ஜெட்கோவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் சில மூத்த அதிகாரிகள் டெல்லிக்கு வந்து மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டார்’’ என்பதுதான் தமிழக அரசின் அன்றைய செய்திக் குறிப்பு.

ஆக இதன் சாரம் என்ன? உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மோடிஜி உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கோட்டையைத் தேடி வந்து கேட்கிறார் பியூஷ் கோயல்.

அதற்கு ஜெயலலிதா, ‘நான் ஏற்கனவே உதய் திட்டத்தால் தமிழகத்துக்கு ஏற்படும் இழப்பு பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் மோடிஜிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். நேரிலும் கொடுத்திருக்கிறேன். அதை பரிசீலியுங்கள் பார்க்கலாம்’’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

’’வாருங்கள் நாம் இருவரும் இணைந்து பிரஸ் ஸை சந்திக்கலாம்’’ என்று ஜெயலலிதாவை அழைத்திருக்கிறார் பியூஷ் கோயல்.

ஆனால் ஜெயலலிதாவோ, ‘’இல்லை. பிரஸ் மீட்டில் நீங்கள் பாட்டுக்கு தமிழகம் உதய் திட்டத்தில் சேர முதல் கட்ட சம்மதம் தெரிவித்துள்ளது என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் அதை நான் அங்கேயே மறுத்தால் உங்களுக்கு தர்ம சங்கடமாகிவிடும். அதனால் நீங்கள் கிளம்புங்கள்.நான் பிரஸ் ரிலீஸ் கொடுத்துக் கொள்கிறேன்’’ என்று பிரஸ்மீட்டுக்கு கூட மறுத்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா.

வெளியே வந்தார் பியூஷ் கோயல். அவர்களை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசாமல் நழுவிச் சென்றார் பியூஷ் கோயல்.

இது நடந்தது ஜூலை 15, 2016. பொம்மலாட்ட பாஷையில் சொல்வதானால் ஜெ.மு. ஜூலை 16.

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 5

இந்த ஆலோசனையின்போது ஜெ.வின் பக்கவாட்டில் மிகவும் பவ்யமாக பாந்தமாக சாந்தமாக அமர்ந்திருந்தனர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர்.

ஜெயலலிதா அப்பல்லோவுக்குப் போனார். கொஞ்ச நாட்களில் முதல்வரின் இலாகா பன்னீருக்குப் போனது. ஜெயலலிதா அப்பலோவில் படுத்துக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 21 ஆம் தேதி தங்கமணி டெல்லி போனார். பியூஷ் கோயலை சந்தித்தார்.

அந்த சந்திப்பு முடிந்தபிறகு பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அது ஜெயலலிதாவின் முறை என்றால், இது பியூஷ் கோயலின் முறை!

எந்த ஒயரை எந்த கனெக்‌ஷன் மூலம் எந்த பிளக்கில் செருகினால் ஷாக் அடிக்கும், பல்பு எரியும் என்று டெல்லிக்குத் தெரியாதா?

(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 3

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *