மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4
ஆரா
அக்டோபர் 24ஆம் தேதி அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் போட்டோவை வைத்து முதலமைச்சர் இலாகாக்களைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்… ‘வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையொட்டி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த எதிர்ப்பு பற்றி குறிப்பிடப்படவே இல்லை.
அன்றைய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் சில பகுதிகளைப் பார்ப்போம்.
“மத்திய அரசு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினைத் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்துமாறும், அவ்வாறு அமல்படுத்தத் தவறினால் தற்போது வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கென வழங்கப்படும் அரிசியின் விலையினை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்பதிற்குப் பதிலாக ரூ.22.54 என்ற விலையில் மட்டுமே வழங்க இயலும் என்றும் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தும்போது, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 50.55 சதவிகித மக்கள் மட்டுமே அரிசி பெறத் தகுதி உடையவர்களாக இருப்பர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமிழகத்துக்கு ஏற்பட உள்ள பாதகங்களை நன்கு உணர்ந்து, மத்திய அரசின் சட்டம் எவ்வாறாக இருந்தாலும், தமிழக மக்களின் நலனே என் நலன் என்று வாழும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலன் கருதி, தமிழகத்துக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் உள்ள ‘அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான’ (ரேஷன் கார்டுதாரர்கள்) அரிசி ஒதுக்கீடு தொடர்ந்து குறைவேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுக் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
* தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 1.11.2016 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
* தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தும்போதும், தற்போது தமிழ்நாடு அரசால் பாகுபாடின்றி ‘அரிசி’ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.
* தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால், மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனாலும், தமிழக அரசு தற்போது ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அளவில் வழங்கப்பட்டுவரும் அரிசியினைத் தொடர்ந்து வழங்கும்.
* ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மேற்படி சட்டத்தின்படி மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்றபோதிலும், தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் 16 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும்” என்று சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார் பாருங்கள் ஒரு செய்தியை… இதுதான் மிகவும் முக்கியமானது.
“முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில், மக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது” என்பதுதான் அது.
அக்டோபர் 24ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஜெயலலிதாவின் ‘அறிவுறுத்தலின்’ பேரில் இந்த முடிவெடுக்கப்படுவதாகச் சொல்கிறது.
ஆனால், அக்டோபர் 27ஆம் தேதி அதிமுகவின் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருக்கிறது.
அந்த வேட்புமனுவில் சான்றாவணம் அளித்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் பாலாஜி, ‘இங்கே கை ரேகை வைத்திருப்பவருக்கு டிரக்யோஸ்டமி சிகிச்சை செய்திருப்பதால் வலது கை வீங்கியுள்ளது. அதனால் அவர் கை ரேகையை எனது முன்னிலையில் தானாகவே பதித்தார்’ என்று சொல்லியுள்ளார். டிரக்யோஸ்டமி என்றால் தொண்டையில் துளையிடுவார்கள். அவ்வாறு துளையிடும்போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருப்பது உறுதி. அதுவும் அந்த டாக்டர் பாலாஜி மூலமாகத்தான் இதுபோன்ற சிகிச்சை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே வெளியே தெரிகிறது.
ஓ.பன்னீர் தலைமையிலான அமைச்சரவை, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்பேரில்’ உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைய அக்டோபர் 24 அல்லது அதற்கு ஓரிரு நாள் முன்னதாக முடிவெடுத்திருக்க வேண்டும். அதாவது ஜெயலலிதா ஓ.பன்னீரிடம் இதுபற்றி அறிவுறுத்தியிருக்க வேண்டும். தொண்டையில் துளையிட்டப்பட்ட நிலையில் ஜெயலலிதா பேச இயலாமல் அக்டோபர் 27ஆம் தேதி கைரேகை பதித்திருக்கிறார். அப்படியென்றால் அதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் டிரக்யோஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியென்றால் உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் இணையுமாறு ஓ.பன்னீருக்கு ஜெயலலிதா எந்த விதத்தில் அறிவுறுத்தியிருக்க முடியும்?
அப்போலோவின் 75 நாள்கள் மீது போடப்பட்டிருந்த திண்டுக்கல் பூட்டை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே சமீபத்தில் உடைத்தார். ‘யாரும் அம்மாவை பார்க்கல. எல்லாம் பொய்தான் சொன்னோம். எங்களை மன்னிச்சிடுங்க’ என்று கையெடுத்துப் பொதுமக்களைப் பார்த்துக் கும்பிடுகிறார்.
அப்படியென்றால் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சேருமாறு அன்றைய முதல்வர் பொறுப்பு வகித்த ஓ.பன்னீரை அறிவுறுத்தியது யார்?
ஒருவேளை அக்டோபர் 1ஆம் தேதி, அக்டோபர் 22ஆம் தேதி என ஜெயலலிதாவை அப்போலோவில் சென்று ’பார்த்து வந்த’ அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலமாக ஜெயலலிதா அறிவுறுத்தியிருப்பாரோ? ஆளுநர் 22ஆம் தேதி அப்போலோ சென்று வந்தார். 24ஆம் தேதி ஆளுநரால் முதல்வரின் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகம் இணைய முடிவெடுக்கப்படுகிறது.
ஆம்… மாநில சுயாட்சியின் தொண்டையில் துளையிடப்பட்டு நடத்தப்பட்ட டிரக்யோஸ்டமி இது.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இந்த பொம்மலாட்டம் என்றால் அடுத்த நூல் உதய் திட்டத்தின் மீது விழுந்தது.
அதையும் பார்ப்போம்!
(அடுத்த ஆட்டம் புதன் அன்று)