ஆரா
’ஜெயலலிதாவின் ஆட்சியைப் போல் அல்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் எளிதாக மூச்சு விடுகிறது’
-இது பிரபல ஆங்கில நாளேடான ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் 2017 ஜனவரி 31 ஆம் தேதி வெளியிட்ட செய்தியின் தலைப்பு. இந்த செய்தியின் தலைப்பே நாம் இதுகாறும் பார்த்த விஷயங்களுக்கு பட்டவர்த்தனமான சாட்சியாகிவிட்டது.
ஜெயலலிதா ‘மக்களின் முதல்வர்’ என்ற நிலையில் இருந்து ஓ.பன்னீர் முதல்வராக பணிபுரிந்தபோதே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்றதும் அவரால் அதிகாரத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர இயலாத நிலை ஏற்பட்ட நிலையிலும், பின் அவர் இறந்துவிட்ட நிலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு சிகப்புக் கம்பளம் விரித்தது ஓ.பன்னீரின் ஆட்சி.
இதைத்தான் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தன் தலைப்பில் எழுதியது.
மூச்சு மட்டுமா விட்டது… துள்ளியே விளையாட ஆரம்பித்தது ஓ.பன்னீரின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்.
அன்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவைக் கடுமையாகச் சாடிய, ஜெயலலிதாவை இந்து விரோதி என்று குற்றம் சாட்டிய ஆர்.எஸ்.எஸ். தமிழக ஊடக ஒருங்கிணைப்பாளர் சடகோபன், ஜனவரி 31 ஆம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்குக் கொடுத்த பேட்டியைப் பாருங்கள்.
‘’ஜெயலலிதாவின் ஆட்சியின்போது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தபோதும் ஆட்சியாளர்கள் அதை தடுத்து நிறுத்தினர். ஆனால் இப்போது ஓ.பன்னீரின் ஆட்சியில் நிலைமை வேறுபட்டிருக்கிறது’’ என்றதோடு நிறுத்தாமல், ‘ வி ஆர் ஹேப்பி இன் ஓ.பன்னீர் கவர்ன்மெண்ட்’ என்கிறார் சடகோபன்.
அதாவது ஆர்.எஸ்.எஸ். அறிவிக்கிறது, ‘நாங்கள் ஓ.பன்னீரின் ஆட்சியில் சந்தோஷமாக இருக்கிறோம்’ என்று.
அப்படியென்றால் ஜெயலலிதா ஆட்சி வேறு, ஓ.பன்னீர் ஆட்சி வேறு என்பதை ஆர்.எஸ்.எஸ். மிகத் தெளிவாக நிறுவி அதை அறிவிக்கவும் செய்கிறது.
இதுமட்டுமல்ல, ‘’2004 ஆம் ஆண்டு பாஜகவோடு கூட்டணி வைத்து ஜெயலலிதா தோற்றதில் இருந்தே அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மீது இனம் புரியாத வெறுப்பில் இருந்தார். 2011 ஆம் ஆண்டு அவர் முதல்வரானதில் இருந்து அவரை சந்திக்க பல முறை முயன்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை சந்திக்க அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு வரை அவர் ஆர்.எஸ்.எஸ்.சை தள்ளியே வைத்திருந்தார்’’ என்கிறார்கள் ஆர்.எஸ். எஸ். நிர்வாகிகள்.
இப்படிப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி அளித்ததோடு… ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற காட்சிகளையும் நாம் காண நேர்ந்தது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்காக ஓ.பன்னீர் திறந்து வைத்த வாசலில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோலங்களைப் போட்டது.
ஆம்… 2017 மே 13 ஆம் தேதி காலை தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சார்பில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துவக்கி வைத்து உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி அரசில் அமைச்சராக இருக்கும் கே.பி. அன்பழகன்.
‘எங்களால் ஜெயலலிதாவை பார்க்க கூடிய முடியவில்லை’ என்றனர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள். ஆனால் ஜெயலலிதா இறந்ததும் என்ன நடந்தது? இரு பக்கமும் காவிக் கொடி பறந்துகொண்டிருந்த மேடையில் ஏறி உரையாற்றுகிறார் அதிமுகவின் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று அழைப்பிதழே அடித்துவிட்டது அந்த இயக்கம். இந்தத் தகவல் பரவி எதிர்ப்பு அதிகமானதும், ‘எனக்குத் தெரியாமல் என் பெயரைப் போட்டுவிட்டார்கள். நான் அந்த தேதியில் ஊரில் இல்லை’ என்று சொல்லி மழுப்பினார் அந்த மந்திரி.
ஜெயலலிதா அரசு ரீதியாக பின்பற்றியக் கொள்கைகள், அரசியல் ரீதியாக பின்பற்றிய கொள்கைகள் இரண்டையுமே மெரினா கடற்கரைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு முற்றிலும் ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கு எதிரான ஆட்சியே இப்போது நடக்கிறது. இதற்குக் காரணம் இங்கே வலுவான தலைமையில்லை என்பதைப் பயன்படுத்தி மத்திய அரசு இயந்திரம் பிடித்துள்ள உடும்புப் பிடிதான்.
தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த அதிகார பொம்மலாட்டத்தில், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு திசை திருப்பப் படுகின்றன என்பதுதான் கொடூரமான, குரூரமான, கசப்பான, உண்மையான உண்மை!
முற்றும்.