ஆரா
அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார் அம்மா. அவர் நலம்பெற்று வீடு திரும்ப மாநிலம் எங்கும் அதிமுக நிர்வாகிகள் கோயில்களை நோக்கி, தேவாலயங்களை நோக்கி, மசூதிகளை நோக்கிப் படையெடுத்தனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்… அர்ச்சனை, அபிஷேக முன்னேற்றக் கழகமாகிப் போனது. மேகங்களுக்கே மூச்சுத் திணறும் அளவுக்குத் தமிழ்நாட்டில் யாகங்கள் நடந்தேறின. தங்கள் இதய தெய்வத்தைக் காப்பாற்றக் கோரி எல்லா தெய்வங்களையும் தொழுதுகொண்டிருந்தார் முதல்வருக்கான இலாகாக்களைப் பெற்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் ஓ.பன்னீர் முக சவரம் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் மீடியாக்களில் அவர் கண்கள் பனித்து வரும்போது தாடியும் வளர்ந்துகொண்டே இருந்தது. அம்மாவின் உண்மை விசுவாசி என்ற பெயரை அதிமுகவினர் தங்களுக்குத் தாங்களே உச்சரித்துக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையேதான் வரலாறு காணாத பண வெள்ளம் பாய்ந்ததால் நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயித்து அந்தத் தகவல் தெரியாமலேயே சீனிவேல் இறந்துபோனதால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் பி ஃபார்ம் எனப்படும் படிவத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டும். ஆனால், அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் கையெழுத்திட இயலாது என்றும் அதனால் கைரேகை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டது.
ஜெயலலிதா கைரேகை வைத்தததை சான்று ஆவணம் அளித்த அரசு டாக்டரின் அட்டெஸ்டேஷனில், ஜெயலலிதாவின் நிலை பற்றி குறிப்பிடும்போது ‘டிரக்யாஸ்டமி சிகிச்சை (தொண்டையில் துளையிட்டு அளிக்கப்படும் சிகிச்சை) அளிக்கப்படுவதால் அவர் நினைவின்றி இருக்கிறார். வலது கை வீங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆவணத்தோடு அக்டோபர் 28ஆம் தேதி மூன்று தொகுதி அதிமுக வேட்பாளர்களும் அந்தந்தத் தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்கள்.
‘அந்தப் படிவத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் கைரேகை அவர் சுய நினைவோடு இருக்கும்போது வைக்கப்பட்டதல்ல. எனவே வேட்பாளரின் வேட்பு மனுவே செல்லாது’ என்ற ஒரு வழக்கு திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளராக நின்று ஜெயித்த ஏ.கே.போஸின் வெற்றிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டு இப்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார்.
இந்த வேட்புமனு, கைரேகை ஆகிய விஷயங்கள் இங்கே முக்கியமானவை. இவற்றைச் சுட்டிக்காட்டக் காரணம் இருக்கிறது.
‘ஜெவின் கைரேகை வைக்கப்பட்ட வேட்புமனு ஏற்கப்பட வேண்டும் என்றால், தமிழக அரசும் முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வரும் உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசின் சார்பில் முதல்வர் ‘பொறுப்பு’ வகித்த ஓ.பன்னீருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த அழுத்தம் மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்த ஜெயலலிதாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்குமா? வாய்ப்பே இல்லை.
அக்டோபர் 11ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் ஓ.பன்னீருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவால் வழங்கப்பட்டன. அமைச்சரவையைக் கூட்டும் அதிகாரம் வழங்கப்பட்டது. அடுத்த சில நாள்கள் அக்டோபர் 19ஆம் தேதி நிதியமைச்சரான ஓ.பன்னீர் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கோட்டையில் கூட்டுகிறார். நடு நாயகமாக ஜெயலலிதாவின் புகைப்படத்தை ‘அப்போதே’ அவர்கள் வைத்துவிட்டார்கள்.
**ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு எதிரான முடிவு**
இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ‘இலாகா’ முதல்வர் ஓ.பன்னீர் தலைமையில் மீண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கோட்டையில் கூடுகிறது. மறக்காமல் ஜெயலலிதா போட்டோவை எடுத்து முன்னால் வைத்துக்கொள்கிறார்.
அந்த அமைச்சரவையில்தான் முடிவெடுக்கப்படுகிறது. ‘வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுகிறது’ என்று.
எந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம்? தமிழகத்தின் பொது விநியோக முறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த ஜெயலலிதா மன்மோகன் அரசு, மோடி அரசு என்ற இரண்டு இந்திய அரசுகளை எதிர்த்துப் போராடிவந்தாரோ… அந்த ஜெயலலிதாவின் போட்டோவை முன்னால் வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு எதிரான முடிவை மேற்கொண்டார் ‘ஆளுநரின் முதல்வர்’ பன்னீர்செல்வம். மக்கள் முதல்வர் என்று ஜெயலலிதா ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது போல, ஓ.பன்னீரை ஆளுநரின் முதல்வர் என்று அழைப்பதே சாலச் சிறந்தது.
அதன் அடிப்படையில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், ‘நவம்பர் 1 முதல் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துகிறது’ என்று அரசாணையும் பிறப்பித்தார்.
ஜெயலலிதா மீண்டும் கோட்டைக்கு வருவார் என்று உறுதியான தகவல் கிடைத்திருந்தால் அவரது நிலைப்பாட்டுக்கு எதிரான இப்படி ஒரு முடிவை அன்றைய ஆளுநரின் முதல்வர் ஓ.பன்னீர் எடுத்திருப்பாரா?
இரும்புத் தலைவி என அவரது கட்சியினரால் போற்றப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக அவரது அரசையே முடிவெடுக்க வைத்ததுதான் பொலிட்டிக்கல் பொம்மலாட்டத்தின் தொடக்கம்!
(ஆட்டம் திங்களன்று தொடரும்…)