ஆரா
2014 நவம்பர் 9…
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் கண்டிப்பான வழிகாட்டுதலில், (இப்போதுள்ள வழிகாட்டுதல் போல அல்ல) முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, பிரதமராக இதே மோடிதான் இருந்தார்.
அந்த தேதியில் தமிழ்நாடு எங்கும் 24 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவக்குகள் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு ஓ.பன்னீர் தலைமையிலான ஜெயலலிதா அரசு குறிப்பிட்ட காரணம் என்ன தெரியுமா? அவர்கள் எடுத்துக் காட்டிய சட்டம் என்ன தெரியுமா?
சென்னை பெருநகர போலீஸ் சட்டம் 1888 – செக்ஷன் 41 ஏ-வின்படி பெருநகரத்துக்குள் கையில் போலீஸாரைப் போன்று தடிகளை ஏந்தி போலீஸாரின் சீருடை போல உடை அணிந்து கூடுபவர்களைத் தடுத்து கைது செய்ய பெருநகர போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின்படி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அனைவரையும் கைது செய்தவர் சத்தியமாக ஓ.,பன்னீர் கிடையாது, ஜெயலலிதாதான்.
2014ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைத் தடுக்கவும் முடக்கவும் ஜெயலலிதா 1888ஆம் ஆண்டு வெள்ளையர் காலத்தில் இயற்றப்பட்ட போலீஸ் சட்டத்தைப் பிரயோகித்தார்.
ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கைதாகினர். தமிழகத்தில் எங்கேயும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த முடியவில்லை.
அப்போது தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊடக ஒருங்கிணைப்பாளரான சடகோபன் நாராயணன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியை இன்றைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
சடகோபன் என்ன சொல்கிறார்?
“ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடந்த 1940ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கிறோம். ஆனால் 2001ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சிக் காலத்திலிருந்து எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிரியாகவே பார்க்கிறார். ஆர்.எஸ்.எஸ். நிகழ்வு சிறு அளவில் எங்கே நடந்தாலும் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி உடனே தடுத்துவிடுகிறார்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோதுகூட ஆர்.எஸ். எஸ். தமிழகத்தில் ஊர்வலங்கள் நடத்த தடையேதும் இல்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நாங்கள் மவுண்ட் ரோட்டிலேயே ஊர்வலம் நடத்தியிருக்கிறோம். திமுக தலைவர் கருணாநிதி எங்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர் என்றாலும் அவர் ஒரு ஜனநாயகவாதி.
ஆனால் ஜெயலலிதான் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொண்டாலும் அவர் ஒரு இந்து விரோதி’’ என்கிறார் சடகோபன்.
இது ஏதோ ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஒருவரது தனிப்பட்ட கருத்து என்று நினைக்க வேண்டாம். இன்று செல்லூர் ராஜுக்களும், ஜெயக்குமார்களும் செய்தியாளர்களிடம் இஷ்டத்துக்குப் பேசுவது போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பேசிவிட முடியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பார்வையில் ஜெயலலிதா ஒரு இந்து விரோதி.
ஏன் இந்து விரோதி?
ஜெயலலிதா ஆலயங்களில் எல்லாம் அன்னதானம் நடத்தியிருக்கிறார், தானே பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வெளிப்படையாக வழிபட்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டில் மற்ற அனைத்து பண்டிகைகளையும் விடக் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது கிருஷ்ண ஜெயந்திதான். அன்று செய்யப்படும் சீடைகளுக்கு ஜெயலலிதா ஒரு காலத்தில் ரசிகையாம்.
இப்படிப்பட்ட இறை நம்பிக்கை கொண்ட இந்துவான ஜெயலலிதாவை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்து விரோதி என்றனர். காரணம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதிக்கவில்லை என்பதற்காக.
“ஆர்.எஸ்.எஸ். இயகக்த்தைப் பொறுத்தவரை தங்களது கடவுள் நம்பிக்கையை தனக்குள் வைத்து, தனிப்பட்ட முறையில் வழிபட்டு வரக் கூடாது. பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தி இதோ பார் என் கடவுள், இதோ பார் என் கடவுள் என்று முழக்கமிட்டுவந்தால்தான் அவர் கடவுள் பக்தி மிக்க இந்து. இது தமிழக மண்ணில் நடக்காது’’ என்று அப்போது பெயர் வெளியிட விரும்பாத அதிமுகவினர் எல்லாம் பத்திரிகைகளில் பேட்டிக் கொடுத்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனை சென்ற பிறகு, இறந்த பிறகு அவர் வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஓ.பன்னீர்கள் செய்தது என்ன?
ஜெ.வுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ்.விஷயத்தில் நடந்த நேற்று இல்லாத மாற்றம் என்னது?
(அடுத்த ஆட்டம் புதன் அன்று)