ஆரா
தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அரசியல் ரீதியான, அரசு ரீதியான அவரது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் அவரது கட்சிக்காரர்களே கொன்று, நினைவிடம் எங்கே என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கும் தொடரே, இந்த ‘பொம்மலாட்டத்தின் கதை’!
மின்சாரத்தில் உதய் திட்டம், மருத்துவக் கல்வித் துறையில் நீட் தேர்வு, சமூக வரையறைக்குள் வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற பல அரசு ரீதியான கொள்கை முடிவுகளில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் என்ன ஆயின? அவர் அப்பல்லோவில் படுத்துக்கொண்டிருக்கும்போதே அவரது நிலைப்பாடுகளும் படுக்க வைக்கப்பட்டன. இதையெல்லாம் பார்த்தோம்.
இப்போது அரசியல் ரீதியாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஜெயலலிதா எந்த நிலையில் வைத்திருந்தார்? இப்போது அவரது ஆட்சியின் நீட்சியாளர்கள் எந்த அளவுக்கு அதைக் கையாள்கிறார்கள் என்ற அரசியல் பொருண்மையைப் பார்ப்போம்.
**ஜெயலலிதாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்**
ஆர்.எஸ்.எஸ். மீதான ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதைப் பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் சில இஸ்லாமிய இயக்க நண்பர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட அணுகுமுறைகளை அவர்கள்தான் துல்லியமாக கவனித்து வைத்திருப்பார்கள்.
ஜெயலலிதாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் உறவு இருந்ததா? இருந்தது என்றால் அது எப்படி இருந்தது?
ஜெயலலிதா பிறப்பால் பிராமணர் என்பதால் அவர் மீது சில கற்பித பிம்பங்கள் சுமத்தப்பட்டன. அதில் ஒன்று அவர் இந்துத்துவ ஆதரவாளர் என்று. ஆனால் அவரிடம் அப்படி ஒரு சித்தாந்தத்தின் நிழல் படிந்ததாக பெரிய அடையாளம் ஏதும் இல்லை.
ஜெயலலிதாவுக்கு சமய நம்பிக்கை நிரம்ப உண்டு. அதில் அவர் வெளிப்படையாகவே இருந்தார். தான் ஒரு திராவிட இயக்கத்தின் தலைவர் என்ற நிலையிலும் தனிப்பட்ட தனது கடவுள் நம்பிக்கைக்கு அவர் என்றைக்கும் திரையிட்டுக்கொண்டதில்லை.
ஆனால் அதேநேரம் அவர் தனது இந்த இறை நம்பிக்கையை எந்த வகையிலும் அரசியலுக்காகப் பயன்படுத்தியது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் தமிழ்நாட்டில் வளர்வதை அவர் எக்காலத்திலும் விரும்பியதில்லை. பிற கட்சிகளுடனான கூட்டணியைப் போன்றுதான் அவர் பாஜகவுடன் கூட்டணி கண்டாரே தவிர, அவர் பாஜகவுடன் சித்தாந்தக் கூட்டணி வைக்கவில்லை என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.
1999 ஜூலை 4 ஆம் தேதி இஸ்லாமிய இளைஞர் இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா பேசுகிறார். 1998இல் பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு அந்த அரசைப் பத்து மாதங்களில் அதிமுகவே கவிழ்த்து முடித்த சூழ்நிலையில்தான் 99ஆம் ஆண்டு தமிழக முஸ்லிம் வாழ்வுரிமை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் ஜெயலலிதா.
அந்தக் கூட்டத்தில் அவரது பேச்சு அவருடைய அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது. அதெல்லாம் இன்றைய அவரது உண்மை விசுவாசிகளுக்குத் தெரியுமா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் வரலாறு என்னும் கஜினி சூர்யா, தன் உடம்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்களைக் குறித்து வைத்திருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘‘இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம், துணிச்சல் எனக்கு உண்டு. பாஜகவுடன் கூட்டணி வைத்த அந்தத் தவறுக்குப் பரிகாரமாக. ஆட்சியைக் கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அஇஅதிமுக பாரதிய ஜனதாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாது. நான் கடைசி வரை இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்வேன்’’ என்று பேசினார் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதா 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தன் வாக்குறுதியை மீறினார். அந்தத் தேர்தலில் தமிழகம்,புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் திமுக-காங்கிரஸ் பெருவெற்றி பெற்றதால்…அவரது பாஜக கூட்டணி பற்றிய விவாதம் தனது பொருண்மையை இழந்துவிட்டது. அயோத்தி கரசேவைக்கும் ஆதரவு தெரிவித்தவர்தான் ஜெயலலிதா.
ஆனால் தமிழகத்தில் தனக்கான செல்வாக்கு தன் மூலமாகவே கிடைக்க வேண்டுமே தவிர, இந்துக்களின் ஓட்டுக்குத் தனக்கு இடைத் தரகர்கள் தேவையில்லை என்று நினைத்தார் ஜெயலலிதா. அதனால் அவர் பாஜகவை முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகத்தான் அணுகினாரே தவிர, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸை அவர் ஒரு பொருட்டாகவே எண்ணியது கிடையாது.
2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சங்கப் பரிவாரங்கள் துள்ளிக் குதித்தார்கள். அதன் விளைவாக அதே ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகம் முழுதும் பிரம்மாண்ட பேரணி நடத்த விரும்பியது. ராஜேந்திர சோழன் பதவி ஏற்றதன் ஆயிரம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி என்று அறிவித்தது ஆர்.எஸ்.எஸ்.
அப்போது ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கினாரா?
பார்ப்போம்!
(அடுத்த ஆட்டம் புதன் அன்று)