ஆரா
இணக்கமாகப்போவது என்பது வேறு… இளித்துக்கொண்டு நிற்பது என்பது வேறு! ஜெயலலிதாவுக்குப் பிறகு இணக்கம் என்ற சொல்லைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளவே தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, ‘வெற்றிக் கதைகள்’ நிகழ்வு இன்னொரு சாட்சி.
தமிழகத்தின் தலைமைச் செயலகம் வரை நுழைந்து கெடுபிடி காட்டிய அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கர்நாடகாவுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தப் போனார். ஒரு நட்சத்திர ஹோட்டலில் சில அமைச்சர்களை மட்டும் அனுப்பி ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் என்று சொல்லிவிட்டார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. இதை நினைவுபடுத்திக்கொண்டு வெற்றிக் கதைகளுக்குள் போவோம்.
மத்திய அரசு நிர்வாகம், மாநில அரசு நிர்வாகம் இரண்டும் விரவிய முறைதான் இந்தியக் கூட்டாட்சி முறை. அதற்காக மத்திய அரசின் அடிமைகள் அல்ல, மாநில அரசுகள் என்பதே நமது ஜனநாயகத்தின் தனித் தன்மை.
ஆனால், டெல்லியை எப்படி குளிர வைக்கலாம் என்பதில் புதுப்புது யோசனைகளாக தமிழ்நாடே தயாரித்துத்தரும் அளவுக்கு போய்விட்டது நிலைமை.
தமிழ்நாட்டின் சோகக் கதையின் ஒரு சாம்பிள்தான் மத்திய அரசின் வெற்றிக் கதைகளை மாநில அரசே தயாரிப்பது.
அதிமுக அரசின் கீழ் உள்ள தமிழக மக்கள் செய்தி தொடர்புத் துறை மத்திய அரசின் மூன்றாண்டு நிறைவு அடைவதை ஒட்டி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ‘வெற்றிக் கதைகள்’ தயாரித்து, அதை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒப்புதல் பெற்று தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்குச் செய்தித் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தது கடந்த மே மாதம் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
மாநில அரசின் திட்டங்களையும், அந்த அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு விளம்பரம் செய்யவே மாநில செய்தி தொடர்புத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எப்படி இருந்தது என்பது மூத்தப் பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்.
அரசு நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படம் எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னாலேயே அனைத்து பத்திரிகைகளுக்கும் ஒரு போன் வரும். அந்தப் போட்டோவில் வலப்பக்கம் நிற்கும் அவரை மட்டும் பிரசுரிக்காதீர்கள் என்று ஓர் உத்தரவு வரும். அதன்படியே அந்த புகைப்படத்தில் இருந்து அந்த போட்டோ மறைக்கப்படும். இப்படி சுய ஆட்சியைவிட ஒரு பய ஆட்சியாக நடந்துகொண்டிருந்தது ஜெ. ஆட்சி.
அந்த பயமாவது ஜெயலலிதா என்ற மாநில முதல்வரின் மீதான பயமாக இருந்தது. ஆனால், இன்று மாநில முதல்வரே மத்திய அரசுக்கு பயப்படும்படியான நிலை வந்துவிட்டதோ என்பதே விவாதம். தமிழக அரசின் செய்தித் துறைக்கு டெல்லியில் இருந்து உத்தரவுகள் வருவதும், அதையே இவர்கள் பின்பற்றுவதும்தான் செய்தி.
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ய தனியாக ‘பிரஸ் இன்பர்மேஷன் பீரோ’ என்று ஓர் அமைப்பு தனியாக மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. தவிர அம்பானி போன்ற நிறுவனங்களும் மோடி அவர்களை வைத்து விளம்பரம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசே மத்திய அரசுக்கு பி.ஆர்.ஓ. வேலை பார்ப்பது அருவருப்பானதாகவே வரலாற்றில் வரவு வைக்கப்படுகிறது.
தமிழக அரசு மத்திய அரசின் மூன்றாண்டுகள் சாதனை மலரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியானதும், குறிப்பாக தமிழகச் செய்தித் துறை இயக்குநர் மத்திய அரசின் குறிப்பிட்ட திட்டங்கள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்குமாறு மாவட்ட செய்தித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்திய கடிதம் வெளியானதும் தமிழக அரசின் மரபணு மாற்றப்பட்டு விட்டதோ என்ற சந்தேகமே அதிகமானது.
இந்த சர்ச்சை பற்றி தமிழக அரசின் செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறிய விளக்கம் அதை விட அருமை.
“தமிழக அரசைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளின் பேட்டியுடன் வெற்றிக் கதைகளாகத் தொகுத்து வெளியிடப்படும். அதை மத்திய அரசு கவனித்து இதேபோல மத்திய அரசின் திட்டங்களையும், பயனாளிகளின் பேட்டியுடன் வெற்றிக் கதைகள் போல் தொகுத்து அளிக்கும்படி கேட்டுக் கொண்டது.
தற்போது மத்திய அரசு மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் தொகுக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. இதில் பயனாளிகளின் பேட்டியை அவர்கள் தமிழில் அல்லது வேறு எந்த மொழியிலும் வெளியிடலாம். மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், மத்திய அரசு அதிகாரிகள், நிதியின் கீழ் இந்த விவரங்கள் தொகுக்கப்பட உள்ளன. என் கடிதம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று ஓர் அதிகாரி விளக்கம் தெரிவிக்கும் அளவுக்குப் போனது நிலைமை.
கலெக்டர்களை மாநில அரசின் மாவட்டச் செயலாளர் போல செயல்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், அதைவிட மேலே போய், தமிழக அரசின் முதல்வராக இருக்கிறவர் மத்திய ஆளுங்கட்சியான பாஜகவின் மாநிலச் செயலாளர் ஆக செயல்படுகிறார் என்பதே இந்தச் செய்தித் துறை நிகழ்வு சொல்லும் செய்தி.
(அடுத்த ஆட்டம் திங்களன்று)