ஆரா
தலைமைச் செயலகம் சென்று தான் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பற்றி அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சொன்ன விளக்கம் நினைவு இருக்கிறதா?
தமிழகத்தில் சில மூத்த பத்திரிகையாளர்கள் மட்டுமே அந்த விளக்கத்தை இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தான் அது தேவை. அந்த விளக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றும் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய வெங்கையா நாயுடு அதன் பின் சில நாட்கள் கழித்து ஜூன் 10 ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியபோது சில பேர் வெங்கையாவிடம் கேட்டனர்.
‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தாங்கள் நடத்திய ஆய்வுக் கூட்டம் என்பது முன்மாதிரியில்லாத முகாந்திரமில்லாத ஒரு எதேச்சதிராக நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே? ’
இதுதான் கேள்வி.
அதற்கு வெங்கையா நாயுடு சொன்ன விளக்கத்தைக் கேட்டால் அப்படியே புல்லரிக்கிறது.
என்ன சொன்னார் இன்றைய துணைக் குடியரசுத் தலைவரும், அன்றைய மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு?
அன்று தி இந்து ஆங்கில ஏட்டில் வெளியான அன்றைய மேதகு மத்திய அமைச்சரின் கருத்துகள்…
‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு நான் நடத்திய ஆலோசனைக் கூட்டம் வரலாறு காணாததோ, தவறானதோ அல்ல.
மத்திய, மாநில என்ற வகைப்பாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் டீம் இந்தியா. தமிழகத்தின் முதலமைச்சர் டெல்லிக்கு வருவதற்கு பதிலாக, நானே சென்னைக்கு வந்தேன், தலைமைச் செயலகம் சென்றேன், மக்கள் திட்டங்கள் பற்றி விவாதித்தேன்’ என்ற வெங்கையா நாயுடு… இந்த ஆய்வுக் கூட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அதிகப்படியான அறிவு கொண்டவர்கள் என்று ஒரு பெயரை சூட்டினார்.
‘அதிகப்படியான அறிவு கொண்டவர்கள்தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் நடக்கவில்லை? ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட நான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் தலைமைச் செயலகம் வருவார். நானும் தலைமைச் செயலகம் சென்றிருக்கிறேன். அப்போது தமிழகத்துக்கும் மத்திய அரசுக்குமான திட்ட ஒருங்கிணைப்புகள் பற்றி விவாத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சிதான் இப்போது நடக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார் வெங்கையா நாயுடு.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடந்திருந்தால் தமிழகத்தின் செய்தித் துறை அவற்றை செய்தியாக வெளியிட்டிருக்கிறதா? மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வெங்கையா நாயுடு நடத்துவாரா? ஞாயிற்றுக் கிழமையும் மக்களுக்காக உழைக்கிறார் என்று இதை நாம் பாசிடிவ் ஆகவே எடுத்துக் கொள்வோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அரசு இதுபற்றி செய்திக் குறிப்புகளும், செய்தியாளர் சந்திப்புகளும் நடந்திருக்கும்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்திய ஆய்வுக் கூட்டங்கள் பற்றி மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதா?
இந்தக் கேள்விகளை கேட்க வேண்டியவர்கள்தான் மத்திய அரசின் முன் பொத்திய வாய்களோடு நடந்துகொண்டிருக்கிறார்களே…
தமிழகத்தில் தலைமைச் செயலகம் வரை வந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு… இதேபோல தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்துவதற்கு பெங்களூரு சென்றார்.
அங்கே விதான் சௌதா எனப்படும் கர்நாடக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் மத்திய அமைச்சரால் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறேன் என்று செல்ல முடிந்ததா? காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கும் அம்மாநிலத்தில் வெங்கையா நாயுடு நடத்திய ஆய்வுக் கூட்டம் எங்கே வைத்துக் கொள்ளப்பட்டது? அதற்கு முதல்வர் சித்தராமையா சென்றாரா?
பார்ப்போம்…
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)