மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 24

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

போலீஸ்காரராக நடித்திருக்கும் வடிவேலுவிடம் ரவுடி பேசுவது போல ஒரு காட்சி ’மருதமலை’ திரைப்படத்தில் வரும்.

‘ஏட்டய்யா என்னை ஞாபகம் இல்லயா? நான் உங்கள அடிச்சிருக்கேன்’

‘எப்பம்மா…’

‘நீங்களே நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க’

‘ஏது… அந்த அழகர்மலை அடிவாரத்துல வச்சி பத்து பேர் கும்மிஎடுத்தீங்களே… அதுவா? இல்லன்னா… குன்னக்குடியில வச்சி குதறி எடுத்தீங்களே அவங்களா?’

-வடிவேலு என்ற போலீஸ் காரர் தன்னை ரவுண்டு கட்டி அடித்த ரவுடிகளின் பட்டியலை பெருமையோடு நினைவுகூர்வார்.

இந்த தொடர் எழுதும் நேரம் எப்படியோ தெரிந்து ஆதித்யா சேனலில் இந்த காமெடியை சரியாக ஓட விட்டிருக்கிறார்கள்.

அதற்கு சிரித்துவிட்டு இந்த சிரிப்புக்கு வருகிறேன்.

இந்தியாவில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கும் இறையாண்மை உண்டு. அந்த அடிப்படையில்தான் கர்நாடகா தனக்கென தனி கொடி அமைக்க பாடுபட்டு வருகிறது. பற்பல மாநிலங்கள் தங்கள் மண்ணின் மைந்தர்கள்தான் தங்கள் மாநில அரசுப் பணிகளில் இருக்க வேண்டும், மத்திய அரசுப் பணிகளிலும் தங்கள் மண்ணைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இருக்க வேண்டும் என்று சட்டங்கள் இயற்றி வைத்திருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டு நிர்வாகம்தான் பாவம் அந்த மருதமலை வடிவேலுவைப் போல தன்னை தாக்கியவர்களின் பெயர்களையெல்லாம் பெருமையோடு பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசின் திட்டங்கள் பற்றி ஆய்வு நடத்தினார் என்று எதிர்க்கட்சிகளும், மாநில சுயாட்சி கொள்கை வீரர்களும் போராட்டக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்… யார் நேரடியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் இதுபற்றி பெருமை பேசிக் கொண்டிருப்பதுதான் கலிகால அரசியல் கொடுமையின் உச்சம்.

ஏனென்றால் ஆளுனரின் இந்த அத்துமீறலுக்கு முன்பே தமிழகத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்து ஆய்வுக் கூட்டமே நடத்திவிட்டுப் போயிருக்கிறாரே அன்றைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.

அவர் தந்த தைரியத்தின் அடிப்படையில்தான் அவர் போட்டுத் தந்த பாதையில்தான் இன்று பன்வாரிலால் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

2017 மே 14 ஆம் தேதி அன்றைய மத்திய அமைச்சரும், இன்றைய துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். நேரு பூங்கா முதல் திருமங்கலம் வரையிலான சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னை திருமங்கலத்தில் நடந்த மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி படமும், அவரது படமும்தான் பெரிதாக இடம்பெற்றிருந்தது. அதிமுக கொடிகளுக்கு இணையாக பாஜக கொடிகளும் பறந்தன என்றெல்லாம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்த மெட்ரோ ரயில் விழாவை அடுத்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நடத்திய ஒரு செயல்தான் மாநில சுயாட்சி வரலாற்றில் மாபெரும் ஒரு கறுப்பு நாளாக அமைந்தது.

ஆம்… அன்று மாலையே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் இருக்கும் கோட்டைக்குச் சென்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…. மத்திய நகர்ப்புற வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்தினார். அதிகாரிகளைக் கடிந்துகொண்டார், அமைச்சர்களைக் கேள்விகேட்டார், முதல்வரையே கேள்வி கேட்டார் என்பதுதான், தலைமைச் செயலகத்தில் அன்று நடந்த கூட்டத்தின் முக்கிய அம்சமே.

தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவின் அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை புலம்ப வைத்தார் ஜெயலலிதா. அதற்காக அதுதான் மாநில சுயாட்சி என்பதல்ல.

ஆனால் அப்படி ஒரு மத்திய அமைச்சர் புலம்பிய நிலை போய், அவரைப் போன்றே ஒரு மத்திய அமைச்சர் தமிழகத் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்து தமிழக முதல்வரையே விசாரணை நடத்துகிறார் என்றால் நிலைமை எப்படி மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழக அரசின் இறையாண்மைக்குள் மத்திய அரசின் தலையீடு என்பது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அப்பட்டமாக நடந்துகொண்டிருக்கிறது.

அதுவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க வைத்து, அவருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனக்கென்ன என்பது போல தனது ட்ரேட் மார்க் புன்னகையை சிந்திக் கொண்டிருக்கிறார்.

பிறகென்ன வெங்கையா போட்டு வைத்த பாதையில் புரோகித் பயணம் செய்கிறார். விரைவில் புரோகித் தலைமைச் செயலகத்துக்கு வந்து துறைச் செயலாளர்களுடன் கூட்டம் நடத்தலாம். அதற்காக ராஜ் பவனில் இருந்து கோட்டை வரைக்கும் (உயர் நீதிமன்ற உத்தரவை மீறி) ஆளுனருக்கு ஆளுயர பேனர்களும் அந்த பேனர்களின் அடியில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் இடம்பெற்றிருக்கலாம்.

தமிழகம்தான் மருதமலை ஏட்டய்யாவாக நிற்கிறதே…

(அடுத்த ஆட்டம் திங்களன்று)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 3

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 5

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 6

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 7

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 8

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 9

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 10

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 11

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 12

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 13

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 14

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 15

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 16

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 17

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 18

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 19

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 20

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 21

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 22

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 23

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 23

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *