ஆரா
இறந்த மனிதரிடம் சீடராக சேர முடியாது… இனி வேறு ஒருவரை குருவாக தேர்வு செய்துகொள்வோம்!- இது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாயில் இருந்து புறப்பட்ட வார்த்தைகள்.
’அம்மாவின் அரசு அம்மாவின் அரசு’ என்று மைக் முன் நிற்கும்போதெல்லாம், செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் பள்ளிப் பிள்ளை மனப்பாட செய்யுள் ஒப்பிப்பது போல சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் அதே எடப்பாடிதான்… ஜெயலலிதா தன் இறுதிக் காலம் வரை எந்த நீட் தேர்வை எதிர்த்தாரோ, அந்த நீட்டை ஆதரித்து, அந்த நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்து, இன்று அந்த நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களையும் திறந்து வைத்திருக்கிறார்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி சென்னை, கலைவாணார் அரங்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா மற்றும் கையேடு வெளியீட்டு விழா நடந்தது.
அதாவது நீட் தேர்வு மட்டுமல்ல…இனி மத்திய அரசு எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளட்டும் என்று அடிமை வாசலை திறந்து வைக்கும் முயற்சிதான் இது என்று கல்வியாளர்களால் கவனிக்கப்பட்டு சொல்லபப்டுகிறது. நீட் என்ற வார்த்தையை திட்டமிட்டு தவிர்த்துவிட்டு… ’பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு’ என்ற பசப்பு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.
யாருக்காக இந்த பசப்பல்?
பிப்ரவரி 1 ஆம்தேதி தமிழக சட்டமன்றத்தில் நீட் எங்களுக்கு வேண்டாம் என்று தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. அந்த மசோதாவை ஆதரித்தவர்தான் இன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
ஆனால் இந்த இருவரும், இன்று நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் எல்லா நுழைவுத் தேர்வுகளுக்கும் அடிமை வாசலை திறந்து வைப்பது ஒரு சோகம் என்றால்… இந்த நிகழ்வின் வரலாற்று சோகம் ஒன்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் ஜெயலலிதா படத்தைப் பெரிய அளவில் போட்டு, ‘பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்’என்று வாசகத்தை அச்சிட்டிருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் இவர்கள் இணைந்து நிறைவேற்றிய சட்டத்தின் இன்றைய நிலை என்ன? மாநில சுயாட்சி என்றால் டெல்லி கிலோ என்ன விலை என்று கேட்கிறது. இவர்களோ, நீங்கள் சொல்லும் விலை கட்டாது, இன்னும் கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று கேட்பது போல இருக்கிறது இந்த நிகழ்வு என்று மாநில சுயாட்சிக்காக பாடுபட்டவர்கள் வேதனைப்படுகிறார்கள்.
ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வுக்கு அவர் படத்தைப் போட்டே பயிற்சி மையம் திறக்கும் இவர்கள்தான் ஜெயலலிதாவின் ஆன்மாவைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, ‘இப்போது நாங்கள் ஜெயலலிதாவின் சிஷ்யர்கள் அல்ல… எங்களுக்கு வேறு ஒரு கிடைத்துவிட்டார்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஆம்…நீட் தேர்வு பயிற்சிமைய தொடக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒரு கட்டிக் கதையைப் பார்ப்போமா?
ஆண்டு பொதுத் தேர்வுக்கும், மாணவர்கள் கடினமாக நினைத்துக் கொண்டிருக்கும் போட்டி தேர்வுகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என எண்ணிப் பார்த்த பொழுது எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மூன்று மாணவர்கள் அக்குருவிடம் சீடர்களாக சேர வருகிறார்கள்.
குருவினை வணங்கி, தங்கள் விருப்பத்தினை அவரிடம் தெரிவிக்கின்றனர். பொறுமையாக அவா¦கள் கூறுவதை கேட்ட குரு, அவர்களிடம் ,நாளை வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்.
பின், அவர் தன் மனைவியிடம், நாளை அம்மாணவர்கள் வரும்போது, நேற்று இரவு குரு உறங்கி கொண்டிருந்த போது அவர் காதில் ஓணான் ஒன்று புகுந்து கடித்ததனால், குரு இறந்துவிட்டார்’’ என்று தெரிவிக்குமாறு கூறுகிறார்.
அடுத்த நாள், அவர்களில் முதலாவதாக வந்த மாணவனிடம் குருவின் மனைவி, குரு சொன்னதை அப்படியே சொல்கிறார்.
அதைக் கேட்ட அம்மாணவன், “ஓ! அப்படியா, அவரது ஜாதகப்படி இம்மாதத்தில் அவருக்கு ஒரு கண்டம் இருந்தது. அதனால்தான் இறந்ததிருப்பார்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறான்.
இரண்டாவது மாணவனிடம் இதையே குருவின் மனைவி சொன்னபோது… ’ஓ… குரு இறந்துவிட்டாரா.. அவரிடம் கல்வி கற்க ஆவலாக இருந்தேன். சரி வேறு ஒரு குருவினை தேடிக் கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
மூன்றாம் மாணவனிடமும் ,அதே செய்தியை குருவின் மனைவி சொன்ன போது, அம்மாணவன் சற்று யோசித்துவிட்டு, ‘மன்னிக்கவும், தாங்கள் பொய் சொல்வதாக நினைக்கிறேன். குரு இறப்பதற்கான வாய்ப்பில்லை” என்கிறான்.
இதை மறைந்து கேட்டுக் கொண்டிருந்த குரு ‘ஆஹா நீயே எனக்கு சரியான மாணவன்’ என்று அவனையே சீடனாக ஏற்றுக் கொள்கிறார்.
குரு இறக்கவில்லை என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்? எனக் கேட்கிறார் குருவின் மனைவி. அதற்கு அந்த மாணவன், “தாயே, தங்கள் கணவர் இறந்ததாக தாங்கள் கூறிய போது உங்கள் முகத்தில் எந்தவிதமான துக்கத்தின் சாயலையும் நான் பார்க்கவில்லை.
மேலும் ஒரு மனிதனின் காதில் ஓணான் நுழைவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே நுழைந்து கடித்தாலும் அதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பதாலேயே, குரு இறக்கவில்லை என்று நான், உறுதியாகக் கூறினேன்” என்றான்.
மூன்றாவது மாணவன் உண்மைத் தன்மையை அறிய, ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளின் துணை கொண்டு பகுத்தாய்ந்த சிந்தனையே போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகளை எதிர்கொள்ள தேவையானதாகும்’’ என்று குட்டிக் கதை சொன்னார் முதல்வர்.
இந்தக் குட்டிக் கதையில் இருந்து இன்றைய இன்னொரு அரசியல் உண்மையையும் அறிய முடிகிறது. அதாவது இரண்டாவது மாணவன் எப்படி, குரு இறந்துவிட்டார் என்று வேறொரு குருவை தேடிக் கொண்டாரோ அதேபோல இப்போது, ஜெயலலிதா இறந்துவிட்டார் என்றதும் இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறொரு குருவை தேடிக் கொண்டுவிட்டார்களோ என்பதுதான் இந்த நீட் தேர்வு பயிற்சி மைய துவக்க விழா விடுத்துள்ள செய்தி.
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)