ஆரா
ஒரு மனிதன் என்றால் உடல் ரீதியாக, இயற்கை அவனுக்கு ஒரே ஒரு நாக்குதான் கொடுத்திருக்கிறது. ஆனால் அம்மனிதன் மாற்றி மாற்றிப் பேசுகிறான் என்று சொன்னால், அவனை இரட்டை நாக்குக் காரன் என்று சாடுவது நம் சமூக வழக்கம்.
அதாவது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவன் தான் இரட்டை நாக்குக் காரன். இதற்காக அம்மனிதனை அவனது நண்பர்கள் குற்றம் சாட்டுவார்கள், குடும்பம் குற்றம் சாட்டும். இது ஒரு தனிப்பட்ட பிரச்னை.
ஆனால் ஏழரை கோடி மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்நாடு அரசு என்பது நீட் விவகாரத்தில் தொடர்ந்து இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிரங்கமாக…இன்னும் சொல்லப் போனால் இந்த ஆட்சியை உருவாக்கிக் கொடுத்திருக்கிற ஜெயலலிதாவின் பாளையங்கோட்டை பிரகடனத்துக்கு நேர் எதிராக பின்பற்றுகிறார்கள் என்றால், அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
நீட் விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் மக்களவை உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இவர்கள் மூவரும் கடந்த பல மாதங்களாக ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
நீட் என்ற ஒற்றை விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூன்று குரல்கள் ஒலிப்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தேவையில்லை…தினமும் தொலைக்காட்சிகள் பார்த்தாலே தெரியும்.
கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது…
”தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் பல்வேறு துறைகள் ஆலோசனை நடத்துவதால் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
ஆனால், தமிழக அரசின் சார்பில் எந்தத் தாமதமும் இல்லை. நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளால் பெரும் சட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. சட்ட சிக்கல்களால் மட்டுமே தாமதம் ஆனது. நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்களுக்கு நன்றி.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே விலக்கு கேட்டுள்ளோம். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைப் பாதிக்காத வகையிலும், மாநில பாடதிட்டத்தில் படித்த கிராமப்புற மாணவர்களைப் பாதிக்காத வகையிலும் இரு தரப்புக்கும் பாதகம் இல்லாத நிலையை தமிழக அரசு எடுக்கும்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. நீட் விவகாரத்தில் எந்த மாணவர்களும் பாதிக்காத வகையில் தீர்வு காணப்படும்’’ என்று கூறினார்.
ஐந்தே நாட்களில் ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிமுகவின் மூத்த தலைவரும் துணை சபாநாயகருமான தம்பிதுரை அதே டெல்லியில் பேட்டி கொடுத்தார்.
’’நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை மத்திய அரசை அணுகினார். பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நிலைமை மாறிவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு தலைவணங்கி செயல்பட வேண்டியது அரசின் கடமை ஆகும்.
இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் தரவில்லை. இதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் முயற்சிதான் செய்ய முடியும்.
நாங்கள் முயற்சி செய்யவில்லை என்று சொல்வது தேவையில்லாத ஒன்று. உதவி செய்வதாக கூறி, பின்னர் ஏன் செய்யவில்லை? என்பதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம்தான் கேட்க வேண்டும்.
நீட் தொடர்பாக மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்போம். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசு எங்களை ஏமாற்றவில்லை’’
இது தம்பிதுரையின் தாழ்மையான குரல்.
அடுத்து மூன்றாவது குரல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுடையது.
தமிழக அரசு நீட் டை எதிர்ப்பதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க… இன்னொரு பக்கம் அதே காலகட்டத்திலேயே நீட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து மட்டுமல்ல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார் செங்கோட்டையன்.
’’பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் (www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’
இவரது குரல் புரிகிறதா?
நீட்டை ஏற்றுக் கொண்டோம். நீட் பயிற்சி மையங்களை அமைப்போம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
இதையெல்லாம் நிரூபிக்கும் விதமாக இதோ இந்தத் தொடர் வெளியாகும் இந்த தேதி நவம்பர் 13 ஆம் தேதி…. சென்னை, சேலம் ஆகிய இடங்களில் முதல் கட்டமாக நீட் பயிற்சி மையங்களை தொடங்கியே வைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அவர்கள் வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் அம்மா, அரியலூரில் தற்கொலை செய்துகொண்டு உயிர் நீத்த அனிதா… இந்த இருவரது மரணத்துக்கும் எவ்வித நியாயமும் செய்யாமல் அவர்களை மீண்டும் சாகடிக்கும் விதமாகத்தான் நீட் பயிற்சி மையங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
அட…இதைவிட பொம்மலாட்டத்தை எப்படி பகிரங்கமாக நடத்த முடியும்?
(அடுத்த ஆட்டம் புதனன்று)