ஆரா
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நேரிலேயே கொண்டுபோய் கொடுத்த ஏழாவது நாளில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்குட்பட்ட சிபிஎஸ்இ, நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கிறது.
அப்படியென்றால் ஏழரை கோடி பேர் கொண்ட தமிழ்நாட்டின் அரசு அமைப்பின் தீர்மானத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். அவ்வளவுதான். அன்று முதல் எப்போது நிருபர்களைச் சந்தித்தாலும், ‘நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறோம். நம்பிக்கையோடு இருக்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் நல்லதே நடக்கும்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆனால், தமிழக மாணவச் செல்வங்களுக்கு மகா குழப்பம். மத்திய அரசின் நீட் தேர்வு அறிவிப்பை நம்புவதா? தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் வாக்குறுதியை நம்புவதா? அமைச்சரின் வாக்குறுதியை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா? கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டால் நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட வேண்டி வருமே?
இப்படிப் பல்வேறு குழப்பங்களில் ஆழ்ந்தார்கள் மாணவர்கள். இந்த குழப்பத்திலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதியும் முடிந்துவிட்டது.
அமைச்சரின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மாநில வழிப் பாடத் திட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு எழுதினர். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 83 ஆயிரத்து 359 பேர் மட்டுமே!
தமிழக அரசின் சட்டப் போராட்டம், அரசியல் ரீதியான போராட்டம் இரண்டுமே சரியாக இல்லாததால் தமிழகச் சட்டமன்றம் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் டெல்லியில் தூங்கின, தூங்கின… தூங்கிக்கொண்டே இருந்தன. இந்தக் குழப்பத்திலேயே மாதங்கள் கடந்து, நீட் தேர்வும் நடந்து முடிந்து ஜூன் 23ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
‘இன்னுமாடா இந்த உலகம் உன்னை நம்பிக்கிட்டிருக்கு’ என்ற சினிமா வசனத்தைப் போல… அப்போதும் கூட தமிழக அரசு ஏதாவது செய்து நீட் விலக்கு வாங்கிக் கொடுத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.
காரணம், நீட் தேர்வு முடிவுகளின்படி தமிழகத்தில் 38 சதவிகிதம் பேரே தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை. அவர்கள் பயிலும் பாடத்திட்டத்தில் நீட் தேர்வை எதிர்கொள்வது மிகக்கடினம் எனப் பலரும் கூறிவந்ததே உண்மையானது. நீட் தேர்வில் முதல் 25 பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
ஆனால், மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்களை நம்பவைக்கும் வகையில் தமிழக அரசு மேலும் சில உடைபடும் முயற்சிகளில் இறங்கியது. அதாவது தமிழக அரசின் இறையாண்மை மிக்க சட்டமன்றத்தின் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வாங்க முயற்சிக்காமல் மேலும் மேலும் சில கண் துடைப்புகளை அரங்கேற்றியது தமிழக அரசு.
அதில் ஒன்றுதான் அந்த அரசாணை. நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால், எதிர்பார்த்தபடியே இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் உயர் நீதிமன்றத்துக்குப் போக, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தார் நீதிபதி ரவிச்சந்திரபாபு.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், உள் ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதுபோல மாநிலப் பாடத்திட்ட மாணவர்களும் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அந்த மனுவையும் தள்ளுபடி செய்து அரசாணை ரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது உயர் நீதிமன்றம்.
தமிழக அரசின் வாதங்கள் அந்த அளவுக்கு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன. சமூக நீதியில் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கும் மாநிலத்தின் சமூக நீதி தொடர்பான அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் அளவுக்கு அந்த அரசாணை பலவீனமாக இருந்தது என்றே கருத வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசின் அரசாணை செல்லாது என்றே அறிவிக்கப்பட்டது.
அதாவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதை அல்லவா இது! தமிழக அரசு சார்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசோடு எவ்வளவு இணக்கமாக இருக்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். அப்பேர்ப்பட்ட இணக்கம் எதை சாத்தியப்படுத்துகிறது?
தமிழகத்துக்கான நலன்களை சாத்தியப்படுத்துகிறதா? இல்லை, தனக்கான நலன்களை மட்டுமே சாத்தியப்படுத்தியதா? நீட் தேர்வே இதற்கு மிகச் சரியான உதாரணம்!
(அடுத்த ஆட்டம் திங்களன்று)