ஆரா
நீட் தேர்வு மசோதா, நீட் தேர்வு விலக்கு கோரி போராட்டங்கள், நீட் விலக்குக்காக டெல்லி பயணம், நீட் தேர்வு அறிவிப்பு, நீட் தேர்வு நடத்துதல், நீட் தேர்வில் கெடுபிடி, நீட் தேர்வின் முடிவுகள், அனிதா என்ற மதிப்பு மிகுந்த பெண்ணின் முடிவு….
நீட் என்ற புள்ளியை வைத்து இப்படி நீண்ட படலங்களை எழுத முடியும். இதற்கெல்லாம் ஒற்றைக் காரணம், தமிழக அரசு நிர்வாகத்தின் ஆட்டம், அலட்சியம்.
தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நீட்டுக்கு விலக்கு கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது நிறைவேறிய ஏழு நாள்களுக்குள் கடந்த பிப்ரவரி 7 ம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு, அன்று இரவே மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று தியானம் செய்தார்.
அவ்வளவுதான்… நீட் உள்ளிட்ட தமிழக மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் தூக்கி குப்பையில் வீசப்பட்டன. தமிழக அரசு மட்டுமல்ல… மீடியாக்களுமே அன்றுமுதல் அதிமுக என்ற கட்சிக்குள் நடக்கும் அதிரடிகளைப் பதிவு செய்த அளவுக்கு, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளைப் பதிவு செய்யவில்லை. எந்த சேனலைத் திருப்பினாலும் தன் நெற்றியில் அதிமுகவைப் பற்றியே எழுதி ஒட்டிக்கொண்டிருந்தன.
ஓ.பன்னீர்செல்வம் முக்கால் மணி நேரம் தியானம் செய்துவிட்டு, அதிமுக பொதுச்செயலாளராக அன்று நியமிக்கப்பட்டிருந்த சசிகலாவைக் கடுமையாகத் தாக்கினார். அவர் தன்னை பதவி விலகச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான், ராஜினாமா செய்ததாகக் கூறினார்.
ஜெயலலிதா மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடியிடம் அன்றைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாடே பார்த்தது. ஒவ்வொரு தொலைக்காட்சியின் கையிருப்பிலும் அந்தக் காட்சிகள் இன்னும் இருக்கும். பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, தமிழக அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் எப்படி கொண்டுவந்தார் என்பதற்குரிய சூட்சும சித்திரங்களாகவே அந்த காட்சிகள் நடந்தன.
காரில் ஏறிய மோடியிடம் அழுதுகொண்டே வருகிறார் ஓ.பன்னீர். அவருக்கு மீண்டும் கையைப் பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார் மோடி.
இதில் முழுக்க முழுக்க மோடியைச் சொல்லியும் குற்றமில்லை. அதிமுக என்கிற 134 எம்.எல்.ஏக்கள் கொண்ட கட்சியில் ஜெயலலிதா என்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டார். ஜெயலலிதா ஆளுமையுள்ளவர், ஆற்றல் மிக்கவர், தலைமைப் பண்பு மிக்கவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், சட்டமன்றத்தின் கணக்குப்படி அவர் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். அந்த ஓர் உறுப்பினர் இல்லை என்றால், அவருக்குப் பதில் அவருடைய தொகுதியில் இருந்து இன்னொரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் அதே சட்டம் வழி செய்கிறது.
ஆனால்… ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருக்கும்போதே தமிழக அரசின் நிர்வாகம் டெல்லிக்கு முழுக்க முழுக்க கீழ் படிகிறது என்றால்… அதை டெல்லியின் ஆளுமை என்றும் எடுத்துக் கொள்ளலாம். டெல்லியின் பிடிக்குள் விரைவில் வீழும் அளவுக்கு இங்குள்ளவர்களின் பலவீனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
‘ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’ என்று அதிமுகவில் ஏன் யாரும் கேட்கவில்லை? ஏனெனில் சேகர் ரெட்டிகளும், ராம் மோகன் ராவ்களும் என்னென்ன செய்தார்கள், யாருக்காக செய்தார்கள், எப்படியெல்லாம் செய்தார்கள் என்பதை மத்திய உளவுத்துறை தங்கத் தாம்பாளத்தில் வைத்து டெல்லியிடம் சமர்ப்பித்துவிட்டது.
அதன் விளைவாகத்தான் டெல்லியின் பொம்மலாட்டமும், அதிமுகவின் அழுகுனி ஆட்டமும் தமிழ்நாட்டை மையமாக வைத்து நடந்து… இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழ்நாடு டெல்லியின் வழியில் நடக்க வேண்டிய நிலைமை உண்டாகிவிட்டது.
பிப்ரவரி 1ஆம் தேதி ஓ.பன்னீர் முதல்வராக இருந்து நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா பின்னுக்குத் தள்ளப்பட்டு கூவத்தூர் கும்மாளங்கள் அரங்கேறின. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரையிலான பத்து நாள்களும் இந்தப் பொம்மலாட்டத்தின் மிக முக்கியமான நாள்கள். அதைத் தனியாக பார்க்க வேண்டும்.
பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும் பிப்ரவரி 22ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் சட்ட மசோதாவைத் தமிழக சுகாதாரத்துறை துணைச்செயலாளர் கந்தசாமி, சார்பு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேரில் ஒப்படைத்தனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே 22 நாள்கள் தூங்கியிருக்கிறது. 23ஆவது நாள்தான் டெல்லிக்குப் போய் சேர்ந்தது.
இந்த நிலையில்தான் அடுத்த எட்டாவது நாள் பிப்ரவரி 28ஆம் தேதி அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது டெல்லி.
என்ன அது?
‘மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்’ என்பதே அந்த அறிவிப்பு!
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)