ஆரா
பொம்மலாட்டம் என்றால் என்ன? மேடையில் இரு பொம்மைகள் ஆடும், பாடும், பேசிக்கொள்ளும். இந்த மேடைக்காட்சியைத் தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு அந்த பொம்மைகளே ஆடுவது போலவும், பாடுவது போலவும், பேசுவது போலவும் இருக்கும்.
உற்றுப் பார்க்க, அருகே இருந்து பார்க்க வாய்ப்பு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்… அந்த பொம்மைகளின் கையில், காலில், கழுத்தில், காதில், இடுப்பில் என்று எல்லா இடங்களிலும் மெல்லிய நூல்கள் கட்டப்பட்டிருக்கும். அந்த நூல்களின் எல்லா முனையும் ஒரு புள்ளியில் சேர்க்கப்பட்டு அந்த புள்ளி மேடைக்குப் பின்னால் இருக்கும் திரைமறைவு கையில் இருக்கும்.
இது பழந்தமிழரின் கலை. ஆனால், புதிய தமிழர்களின் பொம்மலாட்டக் கலை மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஓர் அரசாங்கமே, ஏழரைக் கோடி மக்கள்கொண்ட, இந்தியக் கூட்டாட்சியின் முக்கியமான அங்கமான தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் நிர்வாகமே நூல்களால் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கான நூல் சிக்குகள் அற்று தெளிவான நாள் அக்டோபர் 11-2016.
செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
‘மாண்புமிகு டிஹைட்ரேஷன்’ என்று ஆங்கில மீடியாக்கள் அப்போலோவைக் கிண்டல் செய்தன. ஒருவேளை அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்குமோ என்னவோ. டிஹைட்ரேஷன் என்ற மருத்துவ வார்த்தையில் ஆரம்பித்து கார்டியாக் அரெஸ்ட் என்ற பதத்தில் முடிந்த 74 நாள்கள் கதையை முன்கூட்டியே உணர்ந்துதான் மாண்புமிகு டிஹைட்ரேஷன் என்ற சொல்லாடலில் சுட்டிவைத்தார்கள்.
ஜெயலலிதா அப்போலோவில் இருக்கிறார். தமிழக அரசு நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலையை போலவே நலம் இழக்க ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல டெல்லியின் கரங்கள் தமிழ்நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவருவதற்கு வார்ம்அப் செய்துகொண்டிருந்த நாள்கள் அவை.
இதைப் பளிச்சென்று அம்பலப்படுத்தியவை இரண்டே இரண்டு விஷயங்கள்தான். 1) உணவுப் பாதுகாப்புத் திட்டம், 2) உதய்.
ஜெயலலிதாவின் நிலைப்பாடு இதில் என்ன என்று தெரிந்தால்தான் அப்போலோ நாள்களில் நடந்த ரசாயன மாற்றத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டம் பல மாநிலங்களுக்கு சாதகமானது என்றபோதிலும், தமிழகத்துக்கு மிகவும் பாதகமானது என்பதே உண்மை. தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டப்படி கிராமப்புறங்களில் 75% மக்களுக்கும், நகர்ப்புறங்களில் 50% மக்களுக்கும் மட்டும்தான் உணவு தானியங்களை வழங்க முடியும். தமிழகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால் மத்திய அரசின் திட்டப்படி 50.55% மக்களுக்கு மட்டும்தான் உணவு தானியங்களை வழங்க முடியும். ஆக, தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தை பாதிக்குப் பாதி ரத்து செய்ய வேண்டும்.
இதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்துவந்தார். பிரதமர் மன்மோகன் சிங் காலம் முதல் எதிர்த்தார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று அவரும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியபோதும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.
2011ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் 20.12.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியா போன்று கூட்டாட்சி தத்துவம் கடைப்பிடிக்கப்படும் நாடுகளில் மாநில அரசுகள்தான் மக்களுடன் நேரடியாகவும், நெருக்கமாகவும் தொடர்பு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் மக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். மாறாக மாநில அரசுகளின் அதிகார எல்லையை ஆக்கிரமிக்கவோ, அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தவோ மத்திய அரசு முயலக் கூடாது” என ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்தார். அதன்பின் 24.08.2013 அன்று மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்திலும் எதிர்த்தார்.
ஆட்சி மாறியது. மோடி 2014இல் பிரதமரானார். ஆனால், காட்சி மாறவில்லை. மோடி பிரதமர் ஆனதும் சற்றே தாமதமாகத்தான் அவரை சந்திக்க டெல்லி சென்றார் ஜெயலலிதா. ‘இந்தியாவுக்குத் தேவை மோடியா, இந்த லேடியா?’ என்று 2014 தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய ஜெயலலிதா, மோடி மே மாதம் பதவியேற்ற பிறகு ஜூன் 3ஆம் தேதிதான் டெல்லி சென்று அவரைச் சந்தித்தார்.
அப்போது தமிழ்நாடு சார்பாக அவர் வைத்த முக்கியமான கோரிக்கைகளில், ‘‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதைவிட அதிக உணவு தானியங்களைத் தமிழகம் ஏற்கெனவே பெற்றுவரும் நிலையில், அதே அளவு தானியங்களைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். அந்த தானியங்களுக்கு கிலோ ரூ.3 என்ற விலை மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் அனைவருக்கும் இத்திட்டப்படி உணவு வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்துக்கான மத்திய அரசின் மானியம் 3 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
2015ஆம் ஆண்டிலும் இந்தத் திட்டத்தை எதிர்த்து இரண்டு முறை மோடிக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
அந்த ஜெயலலிதா அப்போலோவில் படுத்துக்கொண்டிருந்த நிலையில்தான்… ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை நோக்கி தரையில் இருந்து கும்பிட்ட ஓ.பன்னீர் சில முடிவுகளை எடுத்தார். எப்படி எடுத்தார்?
ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆன 19ஆவது நாளில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. ‘அரசியல் சட்டம் 166-3இன்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த பொறுப்புகள் அவர் உடல்நலம் தேறி வரும் வரைக்கும் நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவார். முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்’ என்பதுதான் ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு.
ஆக, அக்டோபர் 11, 2016 அன்று அறிவிக்கப்படாத முதல்வராக அறிவிக்கப்பட்டார் ஓ.பன்னீர்.
அதிகமில்லை ஜென்டில்மேன் பதினைந்தே நாள்கள்தான். பொம்மலாட்டத்தின் முதல் நூல் முடுக்கப்பட்டது.
(அடுத்த ஆட்டம் வரும் வெள்ளியன்று)