-ஆரா
பொம்மலாட்டம் என்றாலே கூத்தும் கும்மாளமுமாகதான் இருக்கும். கலுக் கலுக் சிரிப்பும் கலகலவென்ற ரியாக்ஷனும் பெறுவதுதான் பொம்மலாட்டம். ஆனால் இது அரசியல் பொம்மலாட்டம் ஆயிற்றே..! சீரியசாகத்தான் இருக்கும். அதே நேரம்… தமிழில் சிரிக்கிறது என்ற சொல் மிக லாகவமாக பயன்படுத்தப்படுகிறது!
சிரிக்கிறது என்பதற்கும் சிரிப்பாய் சிரிக்கிறது என்ற பதக் கூட்டுக்கும் எக்கச்சக்கமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய கூட்டாட்சிக் குடைக்குள் தனித்தனி சுய உரிமை வீடுகளாய் அமைந்திருக்கும் மாநிலங்களின் உரிமைகள் இன்று சிரிப்பாய் சிரிக்கின்றன என்பதுதான் இந்தத் தொடரின் இழை.
இருக்கட்டும்… இந்த பாகத்தில் சீரியசான ஒரு நகைச்சுவையை பார்ப்போம். முதலில் சீரியசான பகுதியைப் பார்த்துவிடுவோம்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தின் அந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட காத்திரமான, அறிவார்ந்த ஆத்திரமான நடவடிக்கைகளை இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை என்பது கண் கூடு.
தேவைப்பட்டால் தனி சட்டமே கொண்டு வருவோம் என்று பாளையங்கோட்டையில் பிரகடனம் செய்தார் ஜெயலலிதா. ஆனால் தமிழகத்தின் பல கட்சிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால்… இன்று வரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படாமல் மத்திய அரசு என்னும் மேஜைக்கு அடியில் சிக்குண்டு மாநிலப் பல்லியாக நசுங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் நாம் 2016 ஜூலை மாதம் 16 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தை… அதி தீவிர அம்மா விசுவாசிகள் என்ற பெயர் தாங்கியிருக்கும் மத்திய அரசின் விசுவாசிகளுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி டெல்லியில் கூட்டினார் பிரதமர் மோடி. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர். மத்திய அரசின் நிழலிலேயே இருந்து, ‘டெல்லியே டெல்லியை நசுக்குகிறது’ என்ற விசித்திர கோஷத்தை நினைவூட்டும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இந்த கூட்டத்தில் தாதமதமாக கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது.
மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமையை நசுக்கக் கூடாது,பறிக்கக் கூடாது என்று டெல்லியின் நெற்றிப் பொட்டில் விரல் வைத்துக் கருத்துத் தோட்டாக்களைப் பாய்ச்சினார் ஜெயலலிதா.
2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டுதான் மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் நடப்பது பற்றி குறிப்பிட்டு மோடி அரசைப் பாராட்டினார் ஜெயலலிதா. தனது உரையில் மத்திய மோடி அரசை பாராட்டிப் பேசியது அந்த ஒரு புள்ளியில் மட்டும்தான்.
அதற்கு அடுத்து மளமளவென தனது உரிமைக் குரலை ஒலிபரப்பினார் ஜெயலலிதா.
’’இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மாநிலங்களுக்கு இருந்த சட்டம், நிதி தொடர்பான அதிகாரங்களை தன் வசம் எடுக்க மத்திய அரசு முயற்சித்துவருகிறது. ஆனால், மாநிலங்களின் நலன் குறித்த செயல்பாடுகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டியிருக்கிறது.
மாநில அரசு பட்டியலில் உள்ள விவகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவது, வரி வருவாயை மத்திய அரசே எடுக்க ஆரம்பிப்பது போன்றவற்றின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோகிறது. இதற்கு மத்திய அரசுதான் காரணம்’’ என்ற ஜெயலலிதா…நெடுநாட்களாக அரசியல் அரங்கில் பெரிதாகப் பேசப்படாத பூஞ்சி ஆணையத்தைப் பற்றி தூசு தட்டினார்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு அதிகார எல்லைகள் பற்றி ஆராய 2007 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில் மூன்று பேர் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 2010 ஆண்டு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அப்போதைய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வழங்கியது.
மாநில சுயாட்சி விவகாரத்தில் பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகளும் நேர்மறை மற்றும் எதிர்மறை என இருவகை தாக்கங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
இவற்றைக் குறிப்பிட்டு 2016 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரை அமைந்தது.
மத்திய- மாநில அரசு உரிமை குறித்த பூஞ்சி ஆணையத்தின் பல்வேறு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜெயலலிதா கூறினார். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
வனம் மற்றும் வனவிலங்கு ஆகியவற்றை மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய – மாநிலப் பட்டியலுக்கு மாற்றி, சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் மத்திய அரசு இணைத்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா, அதே நேரத்தில் சுற்றுச்சூழலை ஏன் மத்தியப் பட்டியலில் இருந்து மத்திய – மாநிலப் பட்டியலுக்கு மாற்றவில்லையெனக் கேள்வியெழுப்பினார்.
வெளிநாடுகளுடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் பற்றி ஒப்பந்தம் போடுகிறது. இந்தியா சார்பாக அந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டாலும் அந்தத் திட்டம் எந்த மாநிலத்தில் அமைகிறதோ அந்த மாநில அரசோடு முன்னதாகவே கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தினார்.
முந்தைய பிரதமர்களை விட அதிக அதிகாரம் மிக்கவராக தன்னை சித்திரித்துக் கொள்ளும் மோடியின் முன்பு… ஜெயலலிதாவின் இந்த மாநில சுயாட்சிக் கருத்துகள் தமிழகத்தின் உரிமையை டெல்லியில் ஒலித்தன.
இதுவரை சீரியசாக படித்தீர்கள்!
இதில் ஒரு சின்ன நகைச்சுவையோடு இந்த பகுதியை நிறைவு செய்யலாம்!
இவ்வளவு நெஞ்சுரத்தோடு, தமிழ்நாட்டின் நிமிர்ந்த குரலாக, வளையாத மாநில சுயாட்சிக் கருத்துகள் நிறைந்த அந்த ஜெயலலிதாவின் உரையை மோடியின் முன்னால் வாசித்தது யார் தெரியுமோ?
அம்மாவுக்குப் பின்னால் தமிழகத்தின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார் என்று விமர்சனங்களுக்கு உள்ளான அன்றைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் ஜெயலலிதாவின் உரையை மோடிக்கு முன்னால் வாசித்தார்.
காலம் எப்படியெல்லாம் கபடி விளையாடுகிறது பாருங்கள்!
(அடுத்த ஆட்டம் புதனன்று)