ஆரா
மாநிலங்களுக்கு என்று சட்டமன்றமும், நாட்டுக்கு என்று நாடாளுமன்றமும் இருப்பதுதான் மாநில சுயாட்சிக்கான மகத்தான கூறுகளாக இந்திய ஜனநாயகத்தில் இருக்கின்றன.
மாநிலங்களுக்குத் தேவையான சட்டத்தை இயற்றுவதற்காகத்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டமன்றம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. அம்மாநில மக்கள் வாக்களித்து தங்களுக்குத் தேவையான ஆட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் அருமையும் மகிமையும் நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதே தமிழக சட்டமன்றத்தின் ஒரு தீர்மானம் உலக அளவில் எவ்வாறு பேசப்பட்டது என்ற மிக சமீபத்திய வரலாறு நமக்கு இருக்கிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் இலங்கையில் நடந்த போர் பற்றிய பிரச்னையில், ‘இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் 2011 மற்றும் 2013களில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் இது செய்தியாகத்தான் இருந்தது. ஆனால் தமிழக சட்டமன்றத்தின் இந்தத் தீர்மானம் சர்வதே ரீதியில் இலங்கை அரசுக்கு சில நெருக்கடிகளை உண்டாகத்தான் செய்தது.காரணம், தமிழக சட்டமன்றம் என்பது சுமார் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களின் இந்திய கூட்டாட்சிக்கு உட்பட்ட அரசு அமைப்பு. அந்தத் தீர்மானங்கள் உலக அளவில் கவன ஈர்ப்புகளை ஏற்படுத்தின.
உலக அளவிலும் இந்திய அளவிலும் இப்படி பல கவனிப்புகளை ஏற்படுத்திய வரலாறு தமிழக சட்டமன்றத்துக்கு இருக்கிறது. ஆனால் தமிழக சட்டமன்றம் இயற்றிய நீட் விலக்கு சட்டத்தின் நிலை என்ன?
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்குச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு மே மாதம்தான் நீட் தேர்வே நடந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இந்தப் பிரச்னையே வரப்போவதில்லை.
இந்த சட்டத்தை உற்றுப் பார்த்தால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. இதையும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமனே சொல்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நீட்டுக்கு முழுமையான விலக்கு கோரவில்லை. அதை உற்று கவனித்தால் புரியும். தமிழகத்தில் மூன்று விதமான மருத்துவக் கல்வி நிலையங்கள் உள்ளன.
தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள். இவற்றில்தான் அனிதாவைப் போன்ற கிராமப்புற, ஏழை எளிய மக்கள் மருத்துவம் பயில முடியும். தமிழகத்தில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 85 சதவிகிதம் தமிழக மாணவர்களுக்கும், மீது 15 சதவிகிதம் அகில இந்திய கோட்டா அதாவது நீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அடுத்து, சுயநிதிக் கல்லூரிகளில் பல லட்சங்கள் வரை மருத்துவ இடங்களுக்கு கட்டணம். இவற்றில் 50 சதவிகிதம் தமிழக அரசுக்கு. மீதி 50 சதவிகிதம் நீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
மூன்றாவதாக, டீம்டு யுனிவர்சிட்டீஸ். அதாவது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள். இவற்றில் நூறு சதவிகித இடங்களும் நீட் தான். ஆக, தமிழக அரசு கடந்த 1-2-17 அன்று இயற்றிய சட்டத்தில் நீட் தமிழகத்தில் இருந்து முற்றிலும் விரட்டியடிக்கப்படவில்லை. எனவே நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனிதா போன்ற சூழல் வரவே வராது. அந்தச் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதோடு நின்றுவிட்டது தமிழக அரசு. அதற்கு மத்திய அரசிடம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.
இன்னமும் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நமக்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதாவது நாடாளுமன்றத்தின் 92ஆவது கமிட்டி மார்ச் 2016இல் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது. என்னவென்றால் எந்த ஒரு மாநிலம் நீட் வேண்டாம் என்று சொல்கிறதோ அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த கமிட்டி சொல்கிறது.
மேலும், இரண்டாவது முக்கிய விஷயமாக 2016 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் மாடர்ன் டென்ட்டல் காலேஜ் ரிசர்ச் சென்டருக்கும் மத்தியப்பிரதேச அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘எந்தெந்த மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறதோ, அந்த மாநிலங்களுக்கு விலக்கு தர வேண்டும்’என்ற பொருளில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இதையெல்லாம் அறிந்த பிறகுதான் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு வேண்டும்’என்று பாளையங்கோட்டையிலே பேசுகிறார்.
எனவே, தமிழகச் சட்டமன்றம் 1-2-17 அன்று இயற்றிய சட்டம் எல்லா வகையிலும் நியாயமானது. இது ஒன்பது மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றால் தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் இல்லாமல் ஏழை மாணவர்கள் சேர முடியும்.
ஆனால் தமிழக அரசு தொடர்ந்து ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு முதல்வர்களைப் பெற்ற தமிழக அரசு தனது சட்டமன்றத்தில் தான் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை டெல்லியின் முன் ஏன் அடகு வைத்தது?
சட்டமன்றங்கள் இயற்றப்படும் சட்டங்களுக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதில்’அரசியல்’விளையாடுவதை அறிந்த ஜெயலலிதா இதுபற்றியும் அன்றே பேசியிருக்கிறார்.
அதெல்லாம் அம்மாவின் உண்மை விசுவாசிகளுக்குத் தெரியுமா?
(அடுத்த ஆட்டம் திங்களன்று)