|

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 16

ஆரா

பாளையங்கோட்டை பிரகடனம்!

மத்திய அரசின் கிடுக்கிப்பிடியில் தமிழக அரசு இருக்கிறது என்பதற்கு கண்கண்ட இன்னொரு உதாரணம் நீட்! இந்த பொம்மலாட்டத்தில் களப் பலியாக அனிதா என்ற மாணவியின் உயிர் பறிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு கிடைத்துவிடும், இப்போது கிடைத்துவிடும், சில தினங்களில் கிடைத்துவிடும் என்று தமிழக முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் டி.வி மைக்குகளைக் கண்டபோதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நீட் தேர்வு பிரச்னைக்காக பிரதமரைச் சந்தித்தோம், மத்திய அமைச்சரைச் சந்தித்தோம் என்று இங்குள்ள அமைச்சர்கள் சொல்லாத நாளே இல்லை. அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள் என்ற கணக்கே இல்லை.

ஆனால் கடைசியில் நீட் தேர்வு என்னும் சிலுவையின் மீது தமிழகம் அறையப்பட்டது. அதற்காக அனிதா என்னும் உயிர் தாரை வார்க்கப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தவரை அவரால் செல்ல முடியாத இடம் என்று தமிழ்நாட்டில் இருந்திருக்குமா? ஆனால், அரியலூர் மாவட்டம் குழுமூரில் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுப் பக்கம் கூட போக முடியாத நிலைமை தமிழக முதல்வருக்கு இப்போது ஏற்பட்டதே!

நீட் தேர்வைப் பொறுத்தவரை இன்றைய அதிமுகவினருக்கு ஜெயலலிதாவின் பாளையங்கோட்டை பிரகடனத்தை நாம் நினைவுபடுத்த வேண்டும். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நெல்லை பாளையங்கோட்டையில் தேர்தல் பிரசாரத்தின்போது நீட் தேர்வு பற்றி மட்டுமே 15ஆவது நிமிடத்தில் இருந்து 22ஆவது நிமிடம் வரை ஏழு நிமிடங்கள் பேசியுள்ளார்.

அவர் அந்த ஏழு நிமிடங்களில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராகவே இருந்தது. அவர் பேசும்போது பக்கத்தில் பவ்யமே உருவமாய் பம்மி அமர்ந்திருந்தவர்கள்தான் இன்று ஆட்சி நடத்துகிறார்கள்.

அவர்களுக்கு அவர்களின் அம்மாவுடைய அரிச்சுவடியை நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

“வாக்காளப் பெருமக்களே… மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏழை எளிய கிராமப்புற மாணாக்கர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதால், அத்தகைய நுழைவுத் தேர்வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது” என்று முதலிலேயே குறிப்பிடுகிறார் ஜெயலலிதா.

இந்த வார்த்தைகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பொது நுழைவுத் தேர்வுக்கு ஜெயலலிதா மட்டுமல்ல அண்ணா திமுக எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது என்கிறார் ஜெயலலிதா.

அவர் தொடர்கிறார்… “அந்த அடிப்படையிலேயே கடந்த 2005ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஓர் அரசாணை வெளியிட்டதோடு 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி சட்டத்தை எனது தலைமையிலான அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டுவந்தது. இந்த அரசாணையும் சட்டமும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே 2006ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு 2007ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கு மாணாக்கர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் 27-12-2010 அன்று அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என, இந்திய மருத்துவக் குழுமம் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 16

இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் எனது தலைமையிலான அரசால் சரியான வாதங்கள் வைக்கப்பட்டதன் அடிப்படையில், 18.7.2013 அன்று பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அறிவிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாமல் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அப்போதைய பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

மத்தியிலே பாரதிய ஜனதா அரசு அமைந்த பின் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நான் அளித்த கோரிக்கை மனுவிலும், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெறுமாறு நான் கேட்டுக் கொண்டேன். இதை வலியுறுத்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தேன்.

இந்த நிலையில் 11-4-2016 அன்று உச்ச நீதிமன்றம், நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2013ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, மீண்டும் முதலில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டது.

அந்த விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்கால ஆணையாக, மருத்துவப் பட்டப்படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என 9-5-16 அன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையிலும், இதில் வழங்கப்படும் உத்தரவு தமிழகத்துக்குப் பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதால்… தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றியும் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது பற்றியும், நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறியதுடன் அவற்றை எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டம் பற்றியும் தமிழக அரசின் வாதங்கள் பற்றியும் எதையும் தெரிவிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது” என்று இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அசைவையும் பாளையங்கோட்டையில் பட்டியலிட்டார் ஜெயலலிதா.

எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கும் கருணாநிதி இந்த விஷயம் பற்றியும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சரியாக வாதாடப் படவில்லை என்றெல்லாம் ஒரு பொய்யை தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ கவுன்சில் 2010ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு கொண்டுவந்து அறிக்கை வெளியிட்டபோது திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மத்தியில் இருந்தது.

“வாக்காளப் பெருமக்களே… உங்கள் ஆதரவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் அமைந்தவுடன் மருத்துவம் , பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமலேயே… மாணாக்கர்கள் சேர்க்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

தேவை எனில் இதற்கென தனியாக ஒரு சட்டத்தையும் அண்ணா திமுக அரசு கொண்டு வரும்”

– இவைதான் ஜெயலலிதாவின் பாளையங்கோட்டை பிரகடனத்துடைய முழு வார்த்தைகள்!

இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் முதல்வருக்கு இந்த பாளையங்கோட்டை பிரகடனத்தை நினைவுபடுத்திவிட்டு… நீட் திருவிளையாடல்களைப் பார்ப்போம்

(அடுத்த ஆட்டம் புதன் அன்று)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 3

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 5

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 6

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 7

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 8

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 9

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 10

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 11

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 12

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 13

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 14

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 15

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 16

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts