ஆரா
ஜெயலலிதா மிகத் தீவிரமாக எதிர்த்துவந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அவருக்குப் பின் அதிமுக மிகக் கடுமையாக எதிர்க்கவில்லை என்பதே உண்மை. அது ஏன் என்றால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவும், தமிழக அரசும் மத்திய பாஜக கட்டுப்பாட்டுக்குள் சென்றதால்தான் என்பது தமிழகத்தின் சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரிந்த நிஜம்.
ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுகவின் கடுமையான எதிர்ப்பு, வெளிநடப்பையும் மீறி வென்றது. காங்கிரஸும் ஜி.எஸ்.டி.யைச் சில திருத்தங்களுக்குப் பிறகு ஆதரித்த நிலையில் பாஜகவுக்கு மாநிலக் கட்சிகளின் ஆதரவு இதில் தேவையில்லை என்றாகிவிட்டது. அதனால் மற்ற விஷயங்களில் அதிமுகவின் 50 எம்.பி.களுக்காகத் தாஜா செய்த மோடி ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஜெயலலிதாவின் கோரிக்கைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது 2016 நவம்பர் 5ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அப்போதைய தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் பொறுப்பையும் சேர்த்து கவனித்துவந்த நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம்தான் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர் கலந்துகொள்ளாமல் மாஃபா.பாண்டியராஜனை அனுப்பினார். அவருடன் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வணிக வரித் துறை ஆணையர் எஸ்.சந்திரமௌலி உள்ளிட்ட அதிகாரிகளே கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாண்டியராஜன், “ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்துக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதை மத்திய நிதி அமைச்சரும் ஏற்றுக்கொண்டார். “பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு விதமான பொருளுக்கும் எத்தகைய வரியை விதிப்பது என்பது தொடர்பாக அடுத்து நடைபெறும் கூட்டத்திலும் தொடர்ந்து விவாதிக்கப்பட உள்ளது”என்று தெரிவித்தார்.
அந்தக் கூட்டம்வரை அவர்கள் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை வலியுறுத்திக்கொண்டுதான் இருந்தார்கள். அதாவது, ‘அம்மா அப்போலோவில் இருக்கிறார்கள்’என்று கருதியவரையிலும் அவரது கோரிக்கைகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர் அதிமுக அமைச்சர்கள். ஆனால், டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததும் அடுத்த ஐந்தாவது நாள் டிசம்பர் 10ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பன்னீர் தலைமையில் நடந்தது.
காலை 11.30 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து 13 பக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு, மதியம் 1.15 மணியளவில் மீண்டும் அமைச்சரவை கூடி மாலை 4 மணி வரையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான், முக்கியமான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜெயலலிதா எதையெல்லாம் எதிர்த்துவந்தாரோ, அதையெல்லாம் மத்திய அரசின் கட்டளைக்கு இணங்க ஆதரிக்க வேண்டும் என்னும் முடிவுக்கு அமைச்சரவை வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதற்கெல்லாம் முன்பே கடந்த 2016 நவம்பர் மாதமே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் சில வாசகங்களை நாம் கவனிக்க வேண்டும்.
“முதல்வர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின்படி வரி விதிப்பு குறித்து விவாதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்துக்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும்கூட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது” என்பதுதான் ஸ்டாலினின் குற்றச்சாட்டு.
ஆம்… ஓ. பன்னீர்தானே நிதித் துறை அமைச்சர் மற்றும் பொறுப்பு முதலமைச்சர் என்ற வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்றிருக்க வேண்டும்? ஆனால், அவர் பாராமுகமாக இருந்ததன் காரணம் என்ன?
ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியபோதும் தொடர்ந்து நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் மாநிலங்கள் பங்கேற்று தங்கள் உரிமைக் குரலை எழுப்பிவந்தன. ஆனால், தமிழ்நாட்டின் சார்பில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களின் இதய தெய்வமாக, தங்கத் தாரகையாக, கண்டவுடன் காலில் விழும் கடவுளாகக் கருதிய ஜெயலலிதா காட்டிய எதிர்ப்பை, கவுன்சில் கூட்டங்களில் காட்டினார்களா? இல்லை என்பதே உண்மை.
இந்த நிலையில்தான் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துகிறேன் என்று சொல்லி ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தார் பிரதமர் மோடி.
அதைப் பற்றி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
“பண மதிப்பழிப்பு நடவடிக்கையைப் போலவே ஜி.எஸ்.டி.யும் மிகப் பெரிய மூடத்தனமானது. எனவே, எங்கள் கட்சி எம்.பி.க்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்தார் மம்தா. ஜெயலலிதா இருந்திருந்தால் மம்தாவை விடக் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்திருப்பார்.
ஆனால், அவரது படை வீரர்கள் என்ன செய்தார்கள்?
ஜி.எஸ்.டி.யை எதிர்த்து எந்த நாடாளுமன்றத்தில் இருந்து தனது எம்.பி.க்களை வெளிநடப்பு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டாரோ, அந்த நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் தமிழக நிதியமைச்சராக ஜி.எஸ்.டி. விழாவில் பங்கேற்றார் ஜெயக்குமார்.
தமிழக அரசே பய குமாராக இருக்கும்போது பாவம் ஜெயக்குமார் என்ன செய்வார்?
(அடுத்த ஆட்டம் திங்களன்று)