மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 14

Published On:

| By Balaji

ஆரா

மாநிலங்களவையில் திருத்தப்பட்ட மசோதா 2016, ஆகஸ்ட் 3இல் தாக்கல் செய்யப்பட்டு அருண் ஜெட்லியின் ஏழு மணி நேர பதிலுரைக்குப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களைப் பெற்ற அதிமுக, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முதல்வருமான ஜெயலலிதா ஏன் ஜி.எஸ்.டியை எதிர்க்கிறார் என்று எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டில் ஒரு 2016 ஜூன் 16ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதாவது மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக இந்தக் கட்டுரை வெளியானது.

அதில், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் முன்னாள் இயக்குநரும், பொருளாதாரப் பேராசிரியருமான கே.ஆர்.சண்முகம் சில கருத்துகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இப்போதைய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் மாநில அரசு இன்னும் இன்னும் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும் அல்லது இப்போது நிறைவேற்றப்பட்டுவரும் மக்கள் நலத்திட்டங்களில் சிலவற்றைக் கைவிட வேண்டியிருக்கும். இதில் எந்த வாய்ப்பைப் பின்பற்றினாலும் தமிழக அரசு நிர்வாகத்துக்கு அது கடினமாக ஒன்றாகவே இருக்கும். மேலும், இப்போதையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

மேலும், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதங்களிலும் சரி, அவரிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கையிலும் சரி, ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் தமிழகத்துக்கு 9,270 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்’ என்று அழுத்தி அழுத்திக் குறிப்பிட்டார். இது ஏதோ அரசியல் அறிக்கையோ, பொத்தாம் பொதுவான மதிப்பீடோ அல்ல.

ஜி.எஸ்.டியைத் தமிழகம் ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும் என்று முதல்வர் ஜெயலலிதா… தமிழக வணிக வரித்துறைக்காக மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் என்ற சுயேச்சையான அமைப்பின் பொருளாதார நிபுணர்களைக்கொண்டு ஓர் ஆய்வு நடத்தி அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார்.

AIADMK Politics after Jayalalitha's Death Mini Series 14

அதன்படி பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வுக்குப் பிறகு, ஜி.எஸ்.டியை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 9,270 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இந்த பொருளாதார நிபுணர்களின் ஆய்வு முடிவைத்தான் பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திலும், கோரிக்கை மனுவிலும் பிரதானமாக சேர்த்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா.”

இந்தத் தகவலை எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

ஆக அன்றைய முதல்வர் ஜெயலலிதா பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றோ, காங்கிரஸை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவோ ஜி.எஸ்.டியை எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி. என்பது இந்தியக் கூட்டாட்சியில் மாநிலங்களின் வரி வருவாயைச் சூறையாடும் செயல் என்று பொருளாதாரவாதிகளால் ஆராய்ந்து சொல்லப்பட்டதற்கு இணங்கத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜி.எஸ்.டி. மசோதா மக்களவையிலும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஜி.எஸ்.டி. மசோதா ஏற்கெனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2015 மே மாதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், மாநிலங்களவையில் அப்போது நிறைவேறவில்லை. பின்னர் எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று மேலும் மூன்று முக்கிய திருத்தங்களுடன் அதாவது காங்கிரஸ் சொன்ன சில திருத்தங்களுடன் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது. எனவே திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா மீண்டும் 2016 ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மாநிலங்களவையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடந்தபோது இதை எதிர்த்துப் பேசினார் அதிமுக நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன். அதன்பின் அதிமுக வெளிநடப்பு செய்தது.

அடுத்த வாரமே மக்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மக்களவையிலும் தனது எதிர்ப்பை அதிமுக உறுப்பினர்கள் மூலம் பதிவு செய்தார் ஜெயலலிதா. இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் பேசும்போது, “தமிழ்நாடு உற்பத்தி மாநிலம் என்பதால் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். இது தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் அச்சத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, இந்த மசோதாவை எதிர்க்கிறோம்” என்றார். அதிமுகவின் 37 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இப்படி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டின் நலம் கருதி ஜி.எஸ்.டியை மிகக் கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா.

ஆனால், அதையும் மீறிக் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் நள்ளிரவு ஜிகினா விழாவில் பங்கேற்க டெல்லிக்கு விமானம் ஏறினார் அம்மாவின் பெயரை மூச்சுக்கு மூச்சு உச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்.

இதன் பின்னணியை ஆராயத்தான் வேண்டுமா?

(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 3

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 4

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 5

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 6

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 7

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 8

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 9

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 10

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 11

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 12

ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 13