ஆரா
ஜெயலலிதா என்னும் தலைமை உயிரோடு இருந்தபோது இருந்த அதிமுகவுக்கும், அவர் இல்லாத நிலையில் பாஜகவின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிப்போன அதிமுகவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை வெகு துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது ஜி.எஸ்.டி. என்ற மூன்றெழுத்து.
ஜி.எஸ்.டி. என்ற நாடு முழுமைக்குமான சரக்கு மற்றும் சேவை வரியை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் மாநிலங்களுக்கான பொருளாதார, வரி சுதந்திரம் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதை அவர் உணர்ந்ததால் மாநிலப் பொருளாதார சுயாட்சி உட்பட்ட காரணிகளை முன்னிறுத்தி ஜி.எஸ்.டியைக் கடுமையாக எதிர்த்தார்.
2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி பிரதமராகப் பதவியேற்றதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெல்லி சென்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ‘மோடியா, லேடியா’ என்று தமிழக மக்களிடம் வைத்த கேள்விக்குத் தமிழக மக்கள், ‘மோடி வேண்டாம்; லேடிதான்’என்று பதிலளித்து தமிழ்நாட்டின் 37 அதிமுக எம்.பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை டெல்லி சென்று தமிழக முதல்வர் என்ற முறையில் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா… தமிழகத்துக்காக கொடுத்த கோரிக்கை மனுக்களில் முக்கியமானது ஜி.எஸ்.டி. எதிர்ப்பு.
‘ஜி.எஸ்.டி. அமலானால் தமிழகத்துக்கு நிரந்தரமான வரி வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் ஜி.எஸ்.டியில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்தார் ஜெயலலிதா.
இதுமட்டுமல்ல… அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு ஜி.எஸ்.டி. தொடர்பாக விரிவான ஒரு கடிதத்தையும் எழுதினார் ஜெயலலிதா. அதில், ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் பட்சத்தில் தமிழ்நாடு போன்ற தொழில் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களுக்கு நிரந்தரமான வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக ஆராய்ந்து இதை ஈடுசெய்யும் திட்டம் பற்றிய வாக்குறுதி எதுவும் மத்திய அரசால் அளிக்கப்படவில்லை. தவிர, மாநிலங்கள் வரி இழப்பு பற்றி மத்திய அரசின் இழப்பீடு திட்டம் தமிழக அரசைப் பொறுத்தவரை திருப்திகரமாக இல்லை.
எனவே, ஜி.எஸ்.டி. பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு மாநில அரசுகளின் ஆலோசனைகளையும், திருத்தங்களையும் கேட்க வேண்டும். இதுபற்றி தங்களின் ஆக்கபூர்வமான பதிலை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் பிரதமர் மோடிக்கு திட்டவட்டமாக தெளிவாக, தீர்மானமாக கிரிஸ்டல் க்ளியராக அதிமுக என்ற கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார் ஜெயலலிதா.
ஆனால், பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஜி.எஸ்.டி. தொடர்பாக ஜெயலலிதா வலியுறுத்திய முக்கியமான விஷயங்கள்…
* பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு வரி விதிப்பதை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரக் கூடாது. இந்த வரி உரிமையை மாநிலங்களுக்கே விட்டுவிட வேண்டும்..
* ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை முதல் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்; ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
* புகையிலை, புகையிலைப் பொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டும்.
* ஜி.எஸ்.டி. காரணமாக தமிழ்நாட்டுக்கு வருடத்துக்கு 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதற்கு மத்திய அரசின் பதில் என்ன?
* ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களில் மத்திய அரசின் சரக்கு சேவை வரியான நான்கு சதவிகிதத்தை அந்த மாநிலத்துக்கே தந்துவிடுவது வருவாய் இழப்பை ஈடுகட்ட உதவும். இதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும்…
இவை அதிமுக பொதுச்செயலாளர், தமிழக முதல்வர் என்ற பொறுப்புகளில் இருந்த ஜெயலலிதாவின் கோரிக்கைகள். மேற்கண்ட கோரிக்கைகளில் தமிழ்நாடு என்ற வார்த்தையை எடுத்துவிட்டுப் பார்த்தால்… இந்தியாவின் தொழில் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அனைத்து மாநிலங்களின் கோரிக்கையாகவும் இதுதான் இருக்க முடியும்.
ஆனால், ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு ஆகஸ்ட் 2016 வரை மோடியிடம் இருந்து உரிய பதில் வரவே இல்லை. இந்த நிலையில்தான் ஜி.எஸ்.டி. மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது மோடி அரசு.
அதற்கு தமிழகத்தின் லேடி அரசு என்ன என்ன எதிர்வினை ஆற்றியது? லேடி மறைந்த பின் அமைந்த ஜாடிக்கேற்ற மூடி அரசு என்ன எதிர்வினை ஆற்றியது? பார்ப்போம்…
(அடுத்த ஆட்டம் திங்களன்று)