ஆரா
டிசம்பர் 21ஆம் தேதி 2016 ஆம் வருடம்… தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் மீது மத்திய வருமான வரிக் குதிரைகள் பாய்ந்தன.
அவர் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தியிருந்தாலே அது இந்திய வரலாற்றில் தமிழகத்துக்கு அவப் பெயர்தான். ஆனால், வீட்டில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் தலைமைச் செயலகத்துக்கு உள்ளேயே புகுந்து வருமான வரித்துறையினர் வரலாறு படைத்தனர்.
அவ்வாறு வரலாற்றுப் புகழ்வாய்ந்த இந்தத் தலைமைச் செயலக ரெய்டை அடிப்படையாக வைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை எடுத்த துறை ரீதியான நடவடிக்கை என்ன?
வேறொன்றுமில்லை ஜெண்டில்மேன்… மேதகு கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமைச் செயலாளராக கொண்டுவந்ததுதான். கிரிஜா வைத்தியநாதன் நேர்மையானவர், அறிவுக் கூர்மையானவர் என்ற பாராட்டுகளுக்கு மத்தியில் அவர் மத்திய பாஜக அரசின் தேர்வு என்று வெளியான செய்திகளைச் சம்பவங்கள் உறுதிப்படுத்தவே செய்கின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமனம் என்பது முழுக்க முழுக்க தமிழக அரசுக்குப் பாத்தியப்பட்ட, உரிமையான விஷயம். இன்னாரை தலைமைச் செயலாளர் ஆக நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மத்திய பாஜக அரசு கட்டளையிட்டதுதான் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நடந்திருக்கிறது என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.
தனது தலைமைச் செயலாளரின் அறையில் மத்திய அரசின் வருமான வரித்துறை புகுவதைத் தடுக்க முடியாத, அந்த தலைமைச் செயலாளரை அகற்றிவிட்டு டெல்லி தன் இஷ்டத்துக்கு ஒரு தலைமைச் செயலாளரை நியமிக்க அழுத்தம் கொடுக்கும்போது அதைத் தடுக்க முடியாத திராணி இல்லாத அளவுக்குதான் தமிழக அரசு இருந்தது, இருக்கிறது.
கோட்டை வட்டாரத்தில் இப்போதும் அந்த டிசம்பர் 21ஆம் தேதியை நினைத்து சில அதிகாரிகள் நம்மிடம் மனம் திறக்கிறார்கள்.
சரி… பாஜக அரசு தமிழகத் தலைமைச் செயலாளரை அகற்ற வேண்டும் என்று நினைத்தால், அதை அப்போதைய முதல்வர் ஓ.பன்னீருக்கு வாய்மொழி உத்தரவாக இட்டால் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளை போல செய்துவிட்டுப் போயிருப்பாரே? பிறகு ஏன் இந்த ரெய்டுகள்? அதுவும் தலைமைச் செயலகத்தை நோக்கி ஏன் சோதனைகள்? தலைமைச் செயலாளரை ஏன் காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்?
அங்கேதான் பாஜகவின் தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுத்ததாகப் பேசிக் கொண்டார்கள். சரி… என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறைக்குள் புகுந்து ஏராளமான ஆவணங்களை அன்று அள்ளிச் சென்றார்கள். அதுபற்றி யார் கேள்வி கேட்பது?
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய ஆவணங்கள் தலைமைச் செயலாளரின் அறைக்குள்தான் இருக்கும். அதில் எதையெல்லாம் வருமான வரித்துறை அள்ளிச் சென்றது என்ற விவரம்கூட இப்போது தெரியவில்லை. இது திட்டவட்டமான நிர்வாகச் சூறையாடல்தானே… இதை கண்டிக்க ஏன் தமிழக முதல்வருக்கு குரல் எழவில்லை? அந்த சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் வரிசையில் அடுத்து தாங்களும் இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. பின் எப்படி குரல் எழும்?
அரசியலை விடுங்கள்… டிசம்பர் 21ஆம் தேதி ராம் மோகன் ராவ் வீட்டுக்குள்ளும், தலைமைச் செயலகத்துக்கும் வருமான வரித்துறை புகுந்தது. டிசம்பர் 27ஆம் தேதி ஆவேசமாக ராம் மோகன் ராவ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன் மகன் பெயர்கொண்ட சோதனை ஆவணத்தை வைத்துக்கொண்டு தன் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் புகுந்தததாக விளக்கம் அளித்தார்.
தங்கக் கட்டிகள், கோடிகள், முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டன. அப்படியென்றால் ராம் மோகன் ராவ் மீது இந்நாள் வரை ஏன் நடவடிக்கை இல்லை?
இதைவிடக் கொடுமை என்னவென்றால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் புகுந்து ரெய்டு நடத்தும் அளவுக்கு ‘குற்றம்’இழைத்த ராம் மோகன் ராவ்… உடனே காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ராம் மோகன் ராவ், அந்த ரெய்டு நடந்த மூன்றே மாதத்தில், அதாவது இந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
அவர் வீட்டில், தலைமைச் செயலகத்தில் நடந்த ரெய்டுகள் தொடர்பாக இதுநாள்வரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
தலைமைச் செயலகத்தில் ஏன் ரெய்டு நடந்தது? அங்கே என்ன கைப்பற்றப்பட்டது? பின் ஏன் ராம் மோகன் ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்? இவ்வளவு கோடிகள் பறிமுதல் செய்யப்பட்ட அவருக்கு மூன்றே மாதத்தில் பதவி உயர்வு கிடைத்தது எப்படி? கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அவர் மிக அழகாக, எந்த பரபரப்பும் இன்றி ஓய்வு பெற்றது எப்படி?
இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டிய தமிழக அரசு ஏன் கேள்வி கேட்கவில்லை?
இந்தக் கேள்விகளுக்கு பாவம் பாஜக பதில் சொல்ல வேண்டாம்… அது ஒரு கட்சி. மத்திய வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை என்ன பதில் வைத்திருக்கிறது?
தமிழகம் போன்ற ஓர் இளிச்சவாய் மாநிலம் இந்தியாவில் வேறு எங்கும் உண்டா?
(அடுத்த ஆட்டம் வெள்ளியன்று)