ஆரா
இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக என்று தொலைக்காட்சிகளில் சொல்வதுபோல… இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப் படையும், வருமான வரித்துறையும் கூட்டாக நுழைந்து ரெய்டு நடத்தியது தமிழ்நாட்டில்தான்.
நாடி,நரம்பு, தசை, ரத்தம், நாளம், நிணம் என்று எல்லாமே அடிமைத் தளத்தில் ஊறித் திளைத்த ஒரு மாநில அரசால்தான் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். அப்படித்தான் தமிழ்நாடு அரசும் அன்று இருந்தது.
ராம மோகன் ராவ்… 1985 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். ஆன இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குஜராத் அரசின் கடல் சார் வாரியத்தின் துணைத் தலைவராக 2001-2003 மோடி பீரியடில் இருந்தவர். மத்திய அரசின் பணிக்கே செல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று ’பெயர்’ எடுத்தவர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ராம மோகன் ராவ் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிரந்தர வடுவாகிவிட்டார்.
இந்த அதிமுக ஆட்சி பதவியேற்றபோது முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்களில் முதலாவதாக இருந்தவர் ராம மோகன் ராவ். ஆட்சி அமைந்த ஒரு மாதத்துக்குள் அதாவது 2016 ஜூன் 8 ஆம் தேதி, அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகனுக்கு பதிலாக ராம மோகன் ராவ் தலைமைச் செயலாளர் ஆனார். ராம மோகன் ராவை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஜெயலலிதா நியமித்தது அப்போதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பியது.
’’தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் அதிகாரிகளில் மூத்தவரை தலைமைச் செயலாளராக நியமிப்பது தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபு. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மரபு காற்றில் பறக்கவிடப்பட்டது. தமிழ்நாடு பிரிவு (Tamil Nadu Cadre) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 24 பேர் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ளனர். இவர்களில் ராம மோகன் ராவ் 23 ஆவது இடத்தில் உள்ளார். தலைமைச்செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளில் மத்திய அரசு பணிகளில் இருப்பவர்களை விலக்கிவிட்டு பார்த்தால், 13 பேர் தமிழக அரசு பணிகளில் உள்ளனர். அவர்களில் ராம மோகன் ராவ் 12 ஆவது நிலையில் உள்ளார்.
ராம மோகன் ராவை விட தகுதியும், திறமையும் உள்ள 1981 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 22 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரையும் புறக்கணித்து விட்டு, 1985 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ராம மோகன் ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்’’ என்று அப்போதே அதிகாரிகள் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் விமர்சனங்கள் எழுந்தன.
மிக ஜூனியரான ஒருவருக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்கிவிட்டு அடுத்த இரண்டு மாதங்களில் ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். டிசம்பரில் இறந்தும் போய்விட்டார்.
அதே டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை தொடங்கி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் அண்ணாநகர் வீடு, அவரது ஆந்திர உறவினர்களின் வீட்டிலெல்லாம் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்துதான் தமிழகத்துக்கு அந்த அதிர்ச்சிக் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை நோக்கி துணை ராணுவப் படையினர் விரைந்தனர். தமிழக கோட்டைக்குள் துணை ராணுவப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர்.
அங்கிருந்த ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது . தலைமைச் செயலகத்தில் இருக்கும் தலைமைச் செயலாளரின் அறைக்குள் நுழைந்த வருமான வரித்துறையினர் அங்கே ஒவ்வொரு அங்குலமாக சோதனையிட்டனர்.
கையலாகாத அரசு என்று ஒரு பதம் சொல்வோமே… அது அப்போதுதான் நிரூபிக்கப்பட்டது. இத்தனைக்கும் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போதுதான் அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர், தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். தனது அறைக்குச் செல்கிறார்.
அட…
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடந்த ரெய்டு கூட்டாட்சி மீதான அப்பட்டமான தாக்குதல்’ என்று கண்டிக்கிறார். ஆனால் அதே தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு வார்த்தை பேசியிருக்க வேண்டுமே…
மாநிலங்கள் கொடியேற்ற உரிமை வாங்கிக் கொடுத்து வரலாறு படைத்த, தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் மத்திய துணை ராணுவப் படையினரும், வருமான வரித்துறையினரும் நுழைந்து தாண்டவமாடிய அந்தக் காட்சி மத்திய அரசு நடத்தும் பொம்மலாட்டத்தின் ஒரு காட்சிதான் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் காட்டின…
( அடுத்த ஆட்டம் புதன் அன்று)