ஆரா
கடந்த ஒரு வருடமாக தமிழ்நாட்டின் அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றியே இன்றும் விடாமல் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
‘பறவையின் சிறகில் இருந்து உதிர்ந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் தனது வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்பது கவிஞர் பிரமிளின் பிரபலமான கவிதை. அந்தச் சிறகாவது அந்த பறவையின் வாழ்வை ஒருவழியாக எழுதி முடித்துவிட்டு, நம் கண்காணாத ஏதோ ஒரு இடத்தில் விழுந்திருக்கும். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நமது ஊடகங்கள் இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே, பேசிக்கொண்டே இருக்கின்றன ஒரு பறவையின் மரணத்தைப் பற்றி.
தமிழ்நாட்டின் டீக்கடைகள், சலூன்கள், ஷாப்பிங் மால்கள், கோயில்கள், ஆர்பாட்டத் தலங்கள், அரசியல் மேடைகள் என எல்லாவற்றிலும் அந்த ஒரு விஷயமே இன்னும் பேசுபொருளாக இருக்கிறது.
சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை… தமிழக முதல்வராக இருந்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த ஜெயலலிதா மரணம்தான் அந்த விஷயம், விவகாரம் எல்லாம்.
கடந்த வருடம் இதே செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேல் போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்லத்தில் இருந்து அவசரமாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயலலிதா. அழைத்துச் செல்லப்பட்டார் என்பது அவரது பதவிக்கு கொடுக்கப்படும் மரியாதை என்றாலும் கொண்டு செல்லப்பட்டார் என்பதே மருத்துவரீதியில் சரியான வார்த்தை.
ஜெயலலிதா அதற்கு முன் சில வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அப்படியே கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்கூடச் சில நிமிடங்களில் அந்த நிகழ்ச்சி முடிந்துவிடும்.
2015ஆம் ஆண்டு இந்தியாவையே ஏன் உலகத்தையே கவலையோடு கவனிக்க வைத்த நிகழ்வு சென்னையைத் தாக்கிய கடும் வெள்ளம். டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையே மூழ்கியது. போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு ஆகிய அடிப்படை வசதிகள் அனைத்தும் முடங்கின. அந்த வெள்ளத்துக்குக் காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றித் திறந்துவிட்டதுதான் என்று புகார்கள் கிளம்பின.
அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவைத் தொடர்புகொள்ள முடியாததால் அதிகாரிகளே முடிவெடுத்து ஏரியைத் திறந்துவிட்டார்கள் என்று விவகாரம் விவாதமானது. இதைக் கடந்து சென்னையே மூழ்கிய நிலையிலும் முதல்வர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்ன ஏதென்று எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வெள்ளம் வடிந்துகொண்டிருந்த நிலையில் தனது ஆர்.கே.நகர் தொகுதியில் சில நிமிடங்கள் வந்து, வேனில் அமர்ந்தபடியே, ‘வாக்காளப் பெருமக்களே…’ என்று பேசினார் ஜெயலலிதா.
2016 சட்டமன்றத் தேர்தலில்கூட அவர் தமிழ்நாட்டுக்குள் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமே மேற்கொண்டு, தனது சுற்றுப்பயணத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து தமிழக முதல்வராக பதவி ஏற்ற நிகழ்ச்சியில்கூடத் தனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு புதுமையைப் புகுத்தினார் ஜெயலலிதா.
ஒவ்வோர் அமைச்சரும் தனித்தனியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் சுமார் ஒருமணி நேரம் ஆகிவிடும் என்பதால் ஒட்டுமொத்த அமைச்சரவையை இரண்டு குழுவாகப் பிரித்து கோரஸ் ஆக பதவிப் பிரமாண உறுதிமொழியை ஏற்கச் சொல்லிப் பதினைந்து நிமிடங்களில் பதவி ஏற்பு நிகழ்ச்சியையே முடித்தவர் ஜெயலலிதா.
ஆக… ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவதற்கு முன்பே கிட்டத்தட்ட தனது பணிகளை மிகவும் குறுக்கிக்கொண்ட ஒரு முதல்வராகவே செயல்பட்டுவந்தார்.
அப்போதும் ஜெயலலிதாவைப் பார்ப்பது அதிமுகவினருக்கும், அமைச்சர்களுக்கும்கூட அரிதானதாகவே இருந்தது. எனினும், ‘அம்மா’ என்ற சொல் அவர்களுக்கு அனைத்தையும் நடுங்க வைக்கும் ஆணைச் சொல்லாக இருந்தது. அதிகாரிகளுக்கும் ‘சி.எம்.’ என்ற இரண்டெழுத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது. டெல்லியில் இருக்கும் தேசியத் தலைவர்களுக்குக்கூட, ‘மேடம்’ என்ற சொல் ஒருவித உறுதிப்பாட்டை உணர்த்தியது.
அம்மா, சி.எம்., மேடம் என்ற மூன்று சொற்களாலும் அடிமட்ட அதிமுக நிர்வாகி முதல் செங்கோட்டையில் இருக்கும் இந்திய அரசுப் பிரதிநிதிகள் வரை ஒருவித அதிர்வை ஏற்படுத்தி வைத்திருந்தார் ஜெயலலிதா என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. தான் உடல்நல ரீதியாக முழுமையான திறனோடு ஆக்டிவ்வாகச் செயல்பட முடியாத நிலையில்கூட, அம்மா, சி.எம்., மேடம் என்ற சொற்கள் மூலம் ஜெயலலிதா ஏற்படுத்திய தாக்கத்தில் கொஞ்சம்கூடக் குறையவில்லை.
ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் 22 என்ற தேதிதான் இது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. தமிழகமும், தமிழக அரசு நிர்வாகமும் ஒரு பொம்மலாட்டப் பொறியில் சிக்குவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது செப்டம்பர் 22…
அது என்ன பொம்மலாட்டம்? பொம்மைகள் யார்? இயக்கும் கரங்கள் யாருடையவை? பொம்மைகள் அசையும் பின்புலத் திரை எது? மக்களாகிய நாம் இதில் எங்கே இருக்கிறோம்?
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…
(ஆட்டம் தொடரும்…)
மினி தொடர்: இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1