டிஜிட்டல் திண்ணை: தீர்ப்பு எதிரொலி-  வைத்திலிங்கத்துக்கு எடப்பாடி தூது: என்ன செய்கிறார் ஓ.பன்னீர்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஏகப்பட்ட மெசேஜ்கள் அதிமுக பொதுக்குழு மீது சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பற்றித்தான் வந்திருந்தன.

பொறுமையாக எல்லாவற்றையும் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “ஆகஸ்டு 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி பன்னீர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்திருந்தார்.

பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் நீடிக்கும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். இது பன்னீருக்கு மிகப்பெரும் முன்னேற்றமாக கருதப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் அப்பீல் செய்தார்.

அந்த வழக்கில்தான் இன்று (செப்டம்பர் 2) தீர்ப்பளித்த நீதிபதிகள் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்திருக்கிறார்கள். அதிமுகவின் தலைமைப் பந்து  இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போது எடப்பாடியிடம் வந்திருக்கிறது.

நேற்று (செப்டம்பர் 1) பூலித் தேவனுக்கு மரியாதை செலுத்துவதற்காக தனது சொந்த ஊரான தேனியில் இருந்து தென்காசியில் இருக்கும் நெற்கட்டான் செவலுக்கு பன்னீர் செல்வம் சென்றார்.

அப்போது அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் பன்னீர்செல்வம். செப்டம்பர் 2 ஆம் தேதி தீர்ப்பு என்று நேற்று மாலை தகவல் உறுதியானவுடன் தனது தரப்பு முக்கியஸ்தர்களோடு ஆலோசனை நடத்தினார் பன்னீர் செல்வம்.

அப்போது அவர், ‘ ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவில்  ஏற்கனவே ஒருங்கிணைப்பாளரால் அனுமதிக்கப்பட்ட 23 தீர்மானங்களுக்கு மேல் எதுவும் இயற்றப்படக் கூடாதுனு நள்ளிரவில் விசாரித்து முதலில் நமக்கு நீதி வழங்கியது நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் பெஞ்ச் தான். அதே பெஞ்ச் தான் இந்த வழக்குலயும் தீர்ப்பு சொல்லப் போறாங்க.

நமக்கு நல்ல தீர்ப்பாவே கிடைக்கும்’ என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தார். செப்டம்பர் 2 ஆம் தேதி வெற்றிச் செய்தி கேட்டதும் சென்னைக்கு கிளம்பலாம் என்று தேனியிலேயே இருந்தார் பன்னீர்.

மேலும் எடப்பாடி தரப்பில் இருந்தே முக்கியமான சிலர், ‘அப்பீல் தீர்ப்புல எடப்பாடி நம்பிக்கையில்லாம தான் இருக்காரு’ என்றும் பன்னீர் தரப்புக்கு தெரிவித்திருந்தனர். இதனால் தீர்ப்பை மிகவும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார் பன்னீர் செல்வம். 

எடப்பாடி பழனிசாமியும் தனது தரப்பு வழக்கறிஞர்களான இன்பதுரை உள்ளிட்டோரோடு நேற்று முழுதும் ஆலோசனை நடத்தினார். 

இந்த பின்னணியில்தான் இன்று  (செப்டம்பர் 2) காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு  பன்னீருக்கு எதிரானதாகவே அமைந்தது.

தேனியில் தன் வீட்டில் இருந்த பன்னீர் தீர்ப்பைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனோஜ்  பாண்டியனைத் தொடர்புகொண்டார். ‘அண்ணே… ஜட்ஜ்மெண்ட் காப்பி வந்ததும்தான்னே எதையும் சொல்ல முடியும்.

ஆனா, சிங்கிள் ஜட்ஜ்  தீர்ப்பை  ரத்து பண்ணியிருக்காங்க. நாம அப்பீல் போற மாதிரிதான் இருக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார் மனோஜ். அதைக் கேட்டுக்கொண்டே உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டார் பன்னீர் செல்வம். உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செல்வோம் என்றும் தெரிவித்தார். இதேநேரம் எடப்பாடி கூடாரத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. லட்டுகள் பரிமாறி வெடிகள் வெடிக்கப்பட்டன.

aiadmk party general council judgement

பன்னீர் தேனியில் இருந்து சென்னைக்கு திரும்பும்போதே வைத்திலிங்கம் பன்னீரின் லயனில் சென்றிருக்கிறார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை இருவரும் போனிலேயே ஆலோசித்திருக்கிறார்கள். ஆனால் பன்னீர் செல்வத்தின் வழக்கமான ஆதரவாளர்கள் பலர் இன்று அவரை சென்னையில் சந்திக்க செல்வதற்கு தயங்கியிருக்கிறார்கள்.

மனோஜ் பாண்டியன் ஒவ்வொருவருக்கும் போன் போட்டு அல்லது வரச் சொல்லி, ‘தீர்ப்பில் நமக்கு சாதகமான சில விஷயங்கள் முக்கியமானதா இருக்கு. எடப்பாடியோட அப்பீல் தீர்ப்புதானே தவிர ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாவது பற்றி இறுதியான முடிவு சிவில் கோர்ட் வழக்கில்தான் கிடைக்கும்னு தீர்ப்புல சொல்லியிருக்காங்க.

அதனால இந்த தீர்ப்பை நினைச்சு வருத்தப்பட வேணாம்’ என்று சொல்லியிருக்கிறார் மனோஜ் பாண்டியன். பன்னிரீடமும் அவர் இதையே தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் தீர்ப்பை கேள்விப்பட்டதும் பன்னீரின் தென் மாவட்ட ஆதரவாளர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.  ‘நாங்க ஆகஸ்டு 17 ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பு வந்ததுமே பன்னீர் செல்வத்திடம், ‘அண்ணே இப்ப கட்சி நம்மகிட்ட வந்துருச்சுனு நாம பேசாம  இருந்துடக் கூடாது.  பொதுக்குழு உறுப்பினர்கள்  பலர்கிட்ட பேசினோம். நம்ம பக்கம் வர்றதுக்காக கேட்டோம்.

எடப்பாடிகிட்டேர்ந்து வெயிட்டா வாங்கிட்டதால யோசிக்கிறோம்னு சொன்னாங்க. நாமளும் அதே மாதிரி கவனிச்சிட்டா நிறைய பேரு இங்க வந்துடுவாங்க. அவங்ககிட்டேர்ந்து ஃப்ரஷ்ஷா கடிதம் வாங்கி நாம வச்சிக்கிட்டோம்னா எப்பவும் நமக்கு பயன்படும்’னு  சொன்னோம்.

ஆனா பன்னீரோ,  ‘கட்சி நம்மகிட்ட வந்தாச்சு. இனிமே யாருக்கும் எதுவும் தர வேணாம். நீங்க பேசாம இருங்க நான் பாத்துக்குறேன்’னு சொல்லிட்டாரு. பன்னீரோட பசங்க ரவீந்திரகுமாரும், ஜெய பிரதீப்பும் அப்பாவை தொந்தரவு பண்ணாதீங்கனு நிறைய பேரை தவிர்த்துட்டாங்க. அந்த அதீத நம்பிக்கையாலதான் இப்ப  பன்னீர் பக்கம் இருக்கிறவங்க மறுபடியும் நொந்து போற நிலைமை ஏற்பட்டிருக்கு’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

aiadmk party general council judgement

இதற்கிடையே இன்று காலை தீர்ப்பு வெளியிடப்பட்டதும் எடப்பாடிக்கு மிக நெருக்கமான ஒருவர் பன்னீரின் வலதுகரமாக இருக்கும் வைத்திலிங்கத்துக்கு முக்கியமான ஒரு தகவலை அனுப்பியிருக்கிறார். ‘அண்ணே உங்க மேல எடப்பாடியாருக்கு எந்த கோபமும் இல்லை.

நீங்க இங்க வாங்க. உங்க அனுபவத்துக்கும் சீனியாரிட்டிக்கும் உரிய மரியாதை  கண்டிப்பா உண்டு’ என  வைத்திலிங்கத்துக்கு  தகவல் சொல்லியிருக்கிறார். அதற்கு வைத்திலிங்கம் உடனடியாக எந்த ரியாக்‌ஷனையும் காட்டவில்லை.  இதுதான் சமயம் என்று உணர்ந்த எடப்பாடி தரப்பினர் பன்னீர் செல்வத்தை சுற்றியிருக்கும் பலரையும் தொடர்புகொண்டு, ‘கட்சிக்கு வந்திடுங்க.

ஒழுங்கு நடவடிக்கைகளை கூட கைவிட்டுடலாம். பன்னீரை இனியும் நம்பி ஏமாந்துடாதீங்க’ என்று பேசி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் பன்னீரை வழக்கமாக சந்திக்கும் அவரது ஆதரவாளர்கள் கூட சந்திக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

அதிமுக பொதுக்குழு செல்லும் : 128 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

+1
0
+1
3
+1
0
+1
7
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *